தமிழினத்தின் ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள உரிமையை மீட்கும் புரட்சிக்கு மதிப்பளித்து இரவோடு இரவாக மத்திய அரசால் அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு சொல்வது சாக்கு போக்கு என்பது மட்டும் உறுதி.
கருப்பு பணம், நீட் போன்ற விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில்தான் இருந்தன. ஆனாலும் மத்திய அரசு அவசர சட்டங்களை தொடர்ச்சியாக பிறப்பித்திருக்கிறது.
மிருகவதை சட்டத்தில் லாடம் அடிப்பது, மூக்கனாங்கயிறு குத்துதல் உள்ளிட்டவற்றை வதை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை பயன்படுத்துதலும் வதை அல்ல என திருத்தம் செய்தாலே போதும். இந்திய அரசியல் சாசனம் திருத்தப்பட முடியாத ஒன்று அல்ல.
அரிபரந்தாமன் கருத்து
நாட்டின் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது அரசியல் சாசனத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு என கூறியது. ஆனால் தந்தை பெரியார் நடத்திய மாபெரும் போராட்டத்தால் முதலாவது அரசியல் சாசன திருத்தம் கொண்டுவரப்பட்டது வரலாறு; ஆகையால் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டதாலே எல்லாம் முடிந்துவிட்டது என்பது அல்ல; அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க முடியும் என்கிறார் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.
கைவிரித்த மத்திய அரசு
அதேபோல் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் 1960-ம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்தும் அவசர சட்டம் பிறப்பிக்கலாம். ஆனால் மத்திய அரசு, தமிழர்களின் புரட்சி உணர்வை மதிக்க முடியாது என கைவிரித்துவிட்டது.
முகுல் ரோத்தகி
அதே நேரத்தில் தமிழக அரசாலும் அவசர சட்டம் கொண்டு வர முடியும் என்கிறார் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி.
திமுகவின் அவசர சட்டம்
2007-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் 2009-ம் ஆண்டு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நெறிமுறைகள் சட்டம் என தனி அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. அது ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாத காரணத்தால் உச்சநீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மிருகவதை சட்டத்தில் திருத்தம் கொண்டு அவசர சட்டம் பிறப்பித்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழக அரசின் அவசர சட்டம்?
அத்துடன் தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விலங்குகள் நல வாரியம் அதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போகாமல் இருக்க வேண்டும். அந்த வேலையை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் மத்திய அரசு கைவிரித்துவிட்டது. ஆகையால் தமிழக அரசு மூலம் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர வைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
மத்திய அரசு ஆதரவு?
இதுதான் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு தரும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பிரதமர் மோடி கூறியதன் அர்த்தமாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அனேகமாக இதைத்தான் தமிழக அரசு செய்ய திட்டமிட்டிருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மற்றொரு யோசனை
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மற்றொரு யோசனையை முன்வைக்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சிவபாலமுருகன். தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் அவசர மனுவைத் தாக்கல் செய்யலாம். இதற்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய சட்ட அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்; அத்துடன் அனில் ராய் vs பீகார் அரசு – 2001 (7) SCC 318 என்ற வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் மேற்கோள் காட்டலாம் என்கிறார் சிவபாலமுருகன். அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.