கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது.
வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன், அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறார். இப்பிரச்சினையில் தென்கொரியாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறார். இதற்காக ஐ.நா. பொருளாதார தடையும் விதித்து உள்ளது. அதையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் கிம் ஜாங் அன், அமெரிக்காவை தாக்கும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை சோதனையின் இறுதி கட்டத்தை வடகொரியா எட்டிவிட்டதாகவும், விரைவில் இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வடகொரியா, புதிதாக 2 ஏவுகணை சோதனைகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, வடகொரியாவின் நடமாடும் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய என்ஜின்களுடன் 2 ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், இவை விரைவில் பரிசோதித்து பார்க்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். இந்த ஏவுகணையின் என்ஜின்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடகொரியா வெற்றிகரமாக செலுத்திய என்ஜின்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த 2 ஏவுகணைகளிலும் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்றும், சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை விண்ணில் பறந்து சென்று அமெரிக்காவைத் தாக்கும் விதமாக இவை வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
வடகொரியாவின் இந்த அணுசக்தி ஏவுகணை சோதனை முயற்சிக்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. தங்கள் நாட்டை அச்சுறுத்தும் செயல்களில் தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு வருவதாக அது குற்றம் சாட்டி உள்ளது.
அதே நேரம் அணுஆயுதங்களுடன் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறந்து சென்று துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை தொழில்நுட்பம் வடகொரியாவிடம் இருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. அப்படியே கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணையை செலுத்தினால் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழையும் முன்பே அது சுட்டு வீழ்த்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது.