சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள சீனா அதிபர் ஜி ஜின்பிங், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையின் ஐரோப்பிய தலைமையகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி ஜின்பிங், “வரும் காலங்களில் அணு ஆயுதங்கள் மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை நிராகரிப்பதோடு உலகத்தில் இருந்து அணு ஆயுதங்கள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும்.
வல்லரசு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் உள்ள அடிப்படை சித்தாந்தங்களை மதித்து நடக்க வேண்டும், ஒரு நாட்டின் மீது ஒன்றோ அல்லது பல நாடுகளோ ஆதிக்கம் செய்வதை தடுக்க வேண்டும். மேலும், பெரிய நாடுகள் தங்களது கொள்கைகளை சிறிய நாடுகளின் மீது திணிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஐ.நா.சபையின் புதிய பொதுச் செயலாளர் அண்டோனியா கட்டெரஸ் பங்கேற்று ஜி ஜின்பிங் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.