ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதற்கிடையே வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் துபாயில் வசித்து வரும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தினர்.அங்கு உள்ள ஜபீல் பூங்கா மற்றும் அல் கிஸ்சஸ் பகுதியில் உள்ள பூங்கா ஆகிய இடங்களில் தமிழக மக்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ‘பீட்டாவை தடை செய்’ ‘மத்திய அரசே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வா’ ‘நாங்கள் ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.