சாய்பாபா அருளிய 10 முக்கிய கட்டளைகள்!!

ஒரு பக்தன் எப்படி வாழ வேண்டும் என்று மிக, மிக எளிமையாக சாய்பாபா சொல்லி உள்ளார்.தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனிடமும் பாபா, ஆத்ம ஞானத்தைப் போதிப்பதுண்டு. ஆனால் நிறைய பக்தர்கள் அதை மனதில் பதிய வைத்துக் கொள்வதில்லை.

“நிறைய பணம் வேண்டும், சொத்து வேண்டும், சுகம் வேண்டும், நோய் தீர வேண்டும், கடன் தீர வேண்டும், புகழ் வேண்டும்….” இப்படியெல்லாம் தான் பாபாவிடம் பெரும்பாலான பக்தர்கள் கேட்கிறார்களேத் தவிர “எனக்கு ஆத்ம ஞானம் வேண்டும், எனக்கு முக்தி வேண்டும்“ என்று கேட்பதில்லை. மிகச் சிலர்தான் பாபாவிடம் எனக்கு பிறவாமை வேண்டும் என்று கேட்பதுண்டு.

சீரடிக்கு வந்த ஒரு கோடீசுவரரும் பாபாவிடம் இதையே கேட்டார். ஆனால் அவர் கடவுளைக் காண வேண்டும் என்ற ஒருவித ஆசையுடன் பாபாவை அணுகி இருந்தார்.

ஏராளமான செல்வம், பல வீடுகள், வயல்கள் கொண்டிருந்த அவர் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலம் நிச்சயம் கடவுளை பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் சீரடி வந்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவரது பெயர், ஊர் விபரங்கள் ஸ்ரீசாயி சத்சரிதம் உள்பட எந்த நூலிலும் பதிவு செய்யப்பட வில்லை.
அந்த கோடீசுவரர் மூலம் பக்தர்கள் எத்தகைய தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த உலகுக்குத் தெரிவிக்க சாய்பாபா தீர்மானித்தார். எனவே அந்த கோடீசுவரரை பாபா மசூதிக்குள் அழைத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.

பிறகு மற்ற பக்தர்களிடம் பாபா பேசத் தொடங்கினார். அப்போது ஒரு பையனைக் கூப்பிட்டு, “மார்வாடியிடம் சென்று ரூ.5 வாங்கி வா” என்றார். அந்த பையன் சென்று விட்டு திரும்பி வந்து, “மார்வாடி வீடு பூட்டிக் கிடக்கிறது” என்றான்.

உடனே பாபா அந்த சிறுவனிடம், “மளிகைக் கடைக்காரரிடம் ரூ.5 வாங்கி வா” என்றார். அந்த பையனும் சென்று விட்டு திரும்பி வந்து, மளிகைக்கடைக்காரரிடம் பணம் இல்லையாம்“ என்றான்.

இதையெல்லம் அந்த கோடீசுவரர் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் சட்டைப் பையில் நிறைய பணம் வைத்திருந்தார். ஆனால் பாபா கேட்டுக்கொண்டிருந்த 5 ரூபாயைக் கொடுக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு துளி அளவு கூட வரவில்லை.

அந்த கோடீசுவரரைப் பார்த்து புன்னகைத்த சாய்பாபா, “சரி… உங்களுக்கு பிரம்மஞானம் பற்றி சொல்லப் போகிறேன். கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு பக்தன் நினைத்தால் தாம் வாழ்நாளிலேயே கடவுளைப் பார்க்க முடியும். அவரை உணர்ந்து பிறவாமை பேறைப் பெற முடியும். ஆனால் அதற்கு 10 தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

பிறகு அந்த 10 தகுதிகள் என்னென்ன என்று சாய்பாபா பட்டியலிட்டார். அந்த 10 தகுதிகள் வருமாறு:-

1. இறைவனை காணும் விருப்பம்: ஒருவன் பிறவிப் பிணியில் இருந்து விடுதலைப் பெற வேண்டுமானால் முதலில் அது பற்றிய ஆழ்ந்த விருப்பம் கொண்டிருக்க வேண்டும். குடும்பம், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என்ற வளையங்களுக்குள் சிக்கி இருப்பதில் இருந்து விடுபட வேண்டும். கடவுளை எப்படியும் கண்டே ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் மன உறுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற விவகாரங்கள் எதிலும் மனதை செலுத்தக் கூடாது.

2. விரக்தி: வாழ்வில் தேடி வரும் செல்வம், புகழ், சொத்துக் களில் நமது மனதை பதிய விடக்கூடாது. அவற்றின் மீது இருக்கும் ஆசையை வெறுத்து ஒதுக்க வேண்டும். உலகப் பொருட்களின் மீது விரக்தி கொண்டால் தான் ஆன்மிக ராஜ் ஜியத்துக்குள் செல்ல முடியும்.

3. உள்முகமாக பார்த்தல்: பொதுவாக மனிதர்கள் தன்னைச் சுற்றி வெளியில் நடப்பதை மட்டுமே பார்க்கிறான். அவன் மனம் அதில்தான் லயிக்கிறான். இதை மனிதர்கள் கைவிட வேண்டும். அதற்கு பதில் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே உள்முகமாகப் பார்க்க வேண்டும். அதாவது தியானம் போன்றவற்றை செய்து ஆத்மாவை உணர வேண்டும். ஆத்மா பார்த்து தெளிவு பெற வேண்டும்.

4. தீவினைகள் கழிதல்: ஒருவன் கடவுளைக் காண வேண்டுமானால் அல்லது முக்திப் பேறு பெற வேண்டுமானால், தீய தவறுகள் செய்வதை கைவிட வேண்டும். தனது கொடுஞ்செயல்களை நிறுத்த வேண்டும். கொலை, கொள்ளைகள் செய்யக் கூடாது. தன் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து தத்துவம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் ஆத்ம ஞானத்தை ஒரு போதும் பெற்று விட முடியாது.

5. ஒழுங்கான நடத்தை: ஆத்ம ஞானம் பெறுவதற்கு உண்மையான வாழ்க்கை வாழ வேண்டும். போலித்தனமான வாழ்க்கை வாழக் கூடாது. தினமும் ஆழ்நிலை தியானம் செய்ய வேண்டும். பிரம்மச்சர்ய வாழ்க்கையை நடத்த வேண்டும். ஒழுங்காக வாழாமல் எப்படி ஒருவரால் ஆத்ம ஞானத்துக்குள் நுழைய முடியும்? எனவே ஒழுக்கமாக இருங்கள்.

6. க்ரியாக்களை நாடுதல்: நமது உடம்பில் உள்ள ஐம்புலன்களும் தரும் சுகத்துக்கு ப்ரியாக்கள் என்று பெயர். ஆனால் ஆன்மிக வளர்ச்சியைத் தருபவை க்ரியாக்கள். இவை இரண்டுமே தினம், தினம் மக்களை வந்து சேர்கின்றன. இந்த இரண்டில் எதை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். உடல் இன்பம், பேராசைக் குணம், பண ஆசை போன்ற விருப்பங்களை விலக்க வேண்டும். அதே சமயத்தில் தியானம், கோவில், கடவுள் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும். விவேகம் உள்ளவன் மகிழ்ச்சியை விட நன்மையைத் தருவதையே தேர்வு செய்வான். பேராசைக்களை ஒரு போதும் நாடக் கூடாது.

7. மனதை அடக்கி ஆளுதல்: நாம் ஒவ்வொருவரும் மனதையும், உணர்வையும் அடக்கி ஆள வேண்டும். உடம்பு என்பது தேர். ஆத்மா என்பது எஜமானான். புத்தி என்பது தேரோட்டி. மனது என்பது கடிவாளம், உணர்வுகளே குதிரைகள்.

ஒருவனது மனம் கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு அலைந்தால், அவனது உணர்வுகள் அடக்கியாள முடியாதவை களாக இருந்தால் அவனால் ஒரு போதும் ஆத்ம ஞானத்தைப் பெறவே முடியாது. அவன் மீண்டும், மீண்டும் பிறப்பு – இறப்பு எனும் சுழற்சிக்குள் சிக்கி ஆட்பட வேண்டியது தான். ஒருவனது மனம் உண்மையிலே அடக்கி ஆளப்பட்டால் அவன் நல்ல சாரதி போல குதிரைத் தேரில் மிக எளிதாக செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியும். அதாவது அவரால் மிக எளிதாக முக்திப் பேறு பெற முடியும்.

8. மனத் தூய்மை: ஒருவன் தனக்குக் கொடுக்கப் பட்டுள்ள கடமைகளை மன நிறைவுடனும், பற்று இல்லாமலும் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவன் மனம் தூய்மையாகும். மனம் தூய்மைப் பெறாவிட்டால் கடவுளைக் கனவில் கூட காண இயலாது. மனது தூய்மையாக, தெளிந்த நீரோடையாக இருந்தால், அந்த மனத் தூய்மையே ஒருவரை வலுக்கட்டாயமாக ஆத்ம ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

9. குருவின் இன்றியமயாமை: ஆத்ம ஞானத்தை யார் ஒருவராலும் தன்னந்தனியாக பெற்று விட முடியாது. அதற்கு முறையான, உரிய குரு வேண்டும். நல்ல குரு கிடைத்தால் நம்மால் கடவுளைக் காண முடியும். எனவே மனம் தூய்மையானதும் நல்ல குருவைத் தேர்வு செய்ய வேண்டும். நாம் கடினமாக உழைத்தும், அரும்பாடுபட்டும் பெற முடியாத விஷயங்களை எல்லாம் நல்ல குரு ஒருவரால்தான் தர முடியும். ஏனெனில் குருவானவர் அதை தம் வாழ்வில் உணர்ந்திருப்பார். அவர் ஆத்ம ஞானப் பாதையில் ஏற்கனவே நடந்திருப்பதால் தனது சீடர்களை ஆன்மிக பாதைக்கு மிக, மிக எளிதாக அழைத்து செல்வார். படிப்படியாக அதில் முன்னேற்றம் காணச் செய்வார். எனவே ஆத்ம ஞானம் பெற குரு உதவி மிக இன்றியமையாததாகும்.

10. கடவுளின் அனுக்கிரகம்: இறுதியாக கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். முதல் 9 தகுதிகளையும் நாம் அமல்படுத்தினால் இறுதியில் கடவுளின் அருள் தாமாகவே வந்து சேர்ந்து விடும்.

ஏனெனில் யார் ஒருவர் முதல் 9 தகுதிகளையும் மனப்பூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ அவரைப் பார்த்து கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைவார். அந்த பக்தனுக்கு மனதில் உறுதியையும் விவேகத்தையும் கடவுள் வாரி வழங்குவார்.

அதன் மூலம் கடவுள் அந்த பக்தனை பிறவிப் பெருங்கடலைத் தாண்டி மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்.

– இவ்வாறு பத்து தகுதிகளைப் பட்டியலிட்ட சாய்பாபா, அந்த கோடீஸ்வரரைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தார்.

“ஆத்ம ஞானத்தை இப்படித்தான் பெற முடியும்” என்ற அவர், “சரி…. உமது பையில் இருக்கும் 250 ரூபாயை எடுத்துக் கொடும்” என்றார்.உடனே அந்த கோடீசுவரர் தன் சட்டைப் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். மிகச் சரியாக ரூ.250 இருந்தது.

ஆச்சரியம் அடைந்த கோடீசுவரர் 250 ரூபாயை பாபாவிடம் கொடுத்து விட்டு, அவர் காலில் விழுந்து ஆசிப் பெற்றார். ஆத்மஞானத்தை புரிந்து கொண்டதாக கூறி மனநிறைவுடன் சாய்பாபாவிடம் இருந்து விடை பெற்றார்.