தீவினை அகற்றும் காரைமடை அரங்கநாதர்!

காரை மரம் – தலவிருட்சம்

திருமாலின் திருக்கோவில்களில் அரங்கநாதப் பெருமாள் என்றவுடன், ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, பாம்பு மெத்தையில் பள்ளிகொண்ட திருக் கோலமாய் வீற்றிருப்பவரே நம் அனைவருடைய கண் முன்பும் தோன்றும் காட்சிக்குரியவர்.

இந்த அரங்கநாதப் பெருமாளைத் தான் தொண்டரடிப் பொடியாழ்வார்,

‘குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை இலங்கை நோக்கித்
கடல்நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலு மாகண்டு…’

என்று போற்றிப் புகழ்கிறார்.

இத்தகைய சிறப்பு கொண்ட அரங்கநாதபெருமாள் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கம், உத்தமர் கோவில், திருக் குடந்தை, இந்தளூர் சிறுபுலியூர், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சி, திருவெஃகா போன்ற திவ்ய தேசங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சுயம்பு மூர்த்தி

ஆனால் தான்தோன்றி என்று வர்ணிக்கப்படும் சுயம்பு வடிவாய், சதுர வடிவில் திரு முகத்தை மட்டும் காட்டி, மூலவராக எழுந்த ருளியிருக்கும் அரங்கநாதரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! அப்படியொரு அரங்கநாத பெருமாள் வீற்றிருந்து அருள் மழை தூவும் திருத்தலம் ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால், பலரும் வியப்பால் விழிகளை விரிப்பார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் காரைமடை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கிறார், இந்த அரங்கநாதப் பெருமாள். இந்த ஆலயம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் கண்டு வண்ணங்களால் மின்னும் ஆலயமாக மாறியிருக்கிறது. இந்தத் திருக்கோவில் 7 கலசங்களுடன் கூடிய 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கிறது.

இந்த ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பெரிய திருவடியாகிய கருட பகவானைத் தரிசிக்கலாம். கருடனின் சன்னிதிக்கு எதிரே வெங்கடேச அச்சுதப் பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் வெங்கடேச அச்சுதப் பெருமாளுடன், ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் மூலவரான அரங்க நாதர், சிறிய திருமுகம் மட்டும் காட்டி, பக்தர்களைக் காக்கும் கடவுளாக அருளாட்சி செய்து வருகிறார். இந்த ஆலயத்தை கொங்கு திருவரங்கம் என்று அழைக்கிறார்கள்.

தலவரலாறு

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் தாசர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பக்தர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் ஒரு சமயம் தீபந்தம் ஏந்தியபடி காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். காட்டிற் குள் ஒரு இடத்தில் புற்று ஒன்று தென்பட்டது. அந்தப் புற்றில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பக்தர்கள் பதறிப்போனார்கள். இதையடுத்து அவர்கள் தங்கள் குருவான பட்டாச்சாரியாரை அழைத்து வந்து குறிப்பிட்ட இடத்தைக் காட்டினர்.

அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘இங்கிருப்பது பெருமாள்தான்’ என்றது அந்தக் குரல். அவர்கள் சந்தனக் காப்பீடு செய்து பார்த்தபோது, அந்த இடத்தில் சுயம்பு வடிவில் சங்கு சக்கரமேந்திய கரங்களுடன் திருமால் அருட்காட்சி தந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.

இந்த ஆலயத்தை நாம் வலம் வரும்போது, அரங்கநாயகி தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு இடதுபுறம், தனிக்கோவிலில் சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல், பாவை பாடிய ஆண்டாள் நாச்சியார் நின்ற கோலத்தில் அருள்கிறார். இதுதவிர திருச்சுற்றுகளில் பன்னிரு ஆழ்வார்களும், ராமானுஜரும் பக்தி பரவசத்துடன் காட்சி தருகின்றனர்.

காரை மரம் – தலவிருட்சம்

திருக்கோவிலின் வடமேற்கு மூலையில் காரை மரம் பசுமை பரப்பி நிற்கிறது. அது தான் இந்த ஆலயத்தின் தலவிருட்சம். இந்த தல விருட்ச மரத்தின் பெயரால்தான் இந்த ஊர் காரைமடை என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் நீர் நிறைந்த மடைகளில், காரை மரங்கள் முளைத்து இந்தப் பகுதியே காரை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்துள்ளது. இந்த காரை மரங்கள், நோய் தீர்க்கும் மூலிகை மரம் என்பது முக்கிய அம்சம்.

கி.பி. 16-ம் நூற்றாண்டில் நாயக்க வம்சஅரசரான திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒரு முறை அவருக்கு முதுகில் ராஜபிளவு என்ற நோய் ஏற்பட்டது. எவ்வளவு மருத்துவம் செய்தும், மன்னன் தீராத வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது கனவில் தோன்றிய அரங்கன், இத்தலம் சென்று அங்குள்ள காரை மர இலைகளை உட்கொண்டு வரும்படி பணித்தார். அப்படிச் செய்தால் நோய் தீரும் என்றும் அருள்வாக்கு கூறினார். இதையடுத்து கனவில் இறைவன் கூறிய இடத்திற்குச் சென்று, காரை மர இலைகளை உண்டு நோய் நீங்கப்பெற்றான்.

குழந்தைப் பேறு வேண்டி இங்குள்ள தல விருட்சமான காரை மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதுதவிர திருமணத்தடை நீங்க பிரார்த்தித்துக் கொண்டு, மாங்கல்யச் சரகு கட்டி வழிபடும் வழக்கமும் உள்ளது.

அமைவிடம்

கொங்கு திருவரங்கம் என்று அழைக்கப்படும் காரைமடை அரங்க நாதர் கோவில், அருகில் உள்ள கற்பக விநாயகர் கோவில், அதையொட்டி உள்ள நஞ்சுண்டேசுவரர் என்ற சிவாலயம் ஆகிய மூன்று ஆலயங்களும் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன. கொங்கு மக்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் இந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்து வரலாம்.

கோவையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் காரைமடை திருத்தலம் அமைந்துள்ளது.