ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச்சை சாய்த்து உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்தோமின் அதிர்ச்சி அளித்தார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 4-வது நாளான நேற்று மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி அரங்கேறியது.

ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ‘வைல்டு கார்டு’ வீரரான டெனிஸ் இஸ்தோமினை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். எளிதில் வென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச்சுக்கு, இஸ்தோமின் 5 செட் வரை மல்லுகட்டி வசமாக ‘ஆப்பு’ வைத்தார். 4 மணி 48 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் இஸ்தோமின் 7-6 (10-8), 5-7, 2-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வெளியேற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான ஜோகோவிச், இந்த முறையும் மகுடம் சூடி ஆஸ்திரேலிய ஓபனை 7 முறை ருசித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்கும் ஆவலில் இருந்தார். அவரது கனவை தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள 30 வயதான இஸ்தோமின் சிதைத்து விட்டார். 2006-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சின் மோசமான தோல்வி இதுவாகும்.

இஸ்தோமினுடன் ஒப்பிடும் போது ஜோகோவிச் நிறைய தவறுகளை இழைத்தார். பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாகச் செய்யக்கூடிய தவறுகளை 72 முறை செய்து புள்ளிகளை தாரைவார்த்தார். 9 டபுள் பால்ட்டும் செய்தார். அதே சமயம் மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய இஸ்தோமின் 17 ஏஸ் சர்வீஸ்களும் வீசியது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் கூறுகையில், ‘இஸ்தோமின் வியப்புக்குரிய வகையில் ஆடினார். எல்லா பாராட்டும் அவரையே சாரும். முக்கியமான கட்டத்தில் என்னை விட சிறப்பாக செயல்பட்டார். அபாரமாக சர்வீஸ் போட்டதுடன், ஆக்ரோஷமாக ஆடினார். வெற்றிக்கு அவர் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.

3-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-3, 6-4, 7-6 (4) என்ற நேர் செட்டில் கிலெஸ் முல்லரை (லக்சம்பர்க்) வென்று 3-வது சுற்றை உறுதி செய்தார். டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), ரிச்சர்ட் கேஸ்கியூட் (பிரான்ஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்), டேவிட் பெரர் (ஸ்பெயின்), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), கார்லோவிச் (குரோஷியா) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதன் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், பிரேசிலின் ஆந்த்ரே சா ஜோடி 6-4, 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் மேக்ஸ் மிர்னி (பெலாரஸ்)- டிரிட் ஹூய் (பிலிப்பைன்ஸ்) இணையிடம் போராடி வீழ்ந்தது.

சென்னை ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்த இந்தியாவின் புராவ் ராஜா- திவிஜ் சரண் கூட்டணியும் முதல் சுற்றை தாண்டவில்லை. இவர்கள் 6-7 (9), 6-7 (4) என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஜோனதன் எய்செரிக்- பாப்ரிஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோற்று நடையை கட்டினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை (செக்குடியரசு) சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) தன்னை எதிர்த்த டோனா வெகிச்சை (குரோஷியா) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் 76 நிமிடங்களில் பந்தாடினார்.

தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள வளரும் நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-0, 6-2 என்ற செட்டில் 59 நிமிடங்களில் அனா பிளின்கோவாவை (ரஷியா) அடக்கி 3-வது சுற்றை எட்டினார். இதே போல் சிபுல்கோவா (சுலோவக்கியா) 6-4, 7-6 (10-8) என்ற நேர் செட்டில் சு-வெய் ஹிசையை (சீனத்தைபே) தோற்கடித்தார். மகரோவா (ரஷியா), பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), காவ்ரிலோவா (ஆஸ்திரேலியா), எலினா வெஸ்னினா (ரஷியா), பாக்சின்ஸ்கி (சுவிட்சர்லாந்து) ஆகியோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

அதே சமயம் தரநிலையில் 3-வது இடத்தில் உள்ள அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவும் (போலந்து) அதிர்ச்சி தோல்வி பட்டியலில் இணைந்தார். இவரை 79-ம் நிலை வீராங்கனை மிர்ஜனா லூசிச்-பரோனி (குரோஷியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பதம் பார்த்தார். 1998-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி வரும் பரோனி 3-வது சுற்றுக்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.