இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்தது. டோனி (134), யுவராஜ்சிங் (150) சதம் அடித்து அசத்தினர்.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது. விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் ரன்-ரேட் குறையவில்லை.
கேப்டன் மோர்கல் சதம் அடித்தார். அவர் ரன்-அவுட் ஆனதும் வெற்றி இந்தியா பக்கம் திரும்பியது.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 366 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 15 ரன் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது.
வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. டோனி, யுவராஜ்சிங் நிலைத்து நின்று விளையாடினர். 25 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்துவிட்டு அதிலிருந்து மீண்டு 381 ரன் குவிந்தது அற்புதமானது.
ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்பதை அறிந்து இருந்தோம். ஆனால் பந்துவீச கடினமாக இருந்தது. கடைசி கட்டத்தில் எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக இங்கி லாந்து தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு திறமையை வெளிப்படுத்த உத்வேகம் அளிக்கும். நாங்கள் 75 சதவீத திறமையைதான் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து கேப்டன் மோர்கல் கூறுகையில், “ரன் இலக்கை நோக்கி வந்து தோற்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது. டோனி, யுவராஜ்சிங்குக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது.
நாங்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம். 381 ரன் இலக்கை பெற்றுவிடலாம் என்று நம்பினோம். ஆனால் எங்கள் திறமைக்கு ஏற்ப விளையாட வில்லை” என்றார்.