ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் போராட்டம்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள், கடையடைப்பு போராட்டம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மேலும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ரஜினி கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.