ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு சமுத்திரகனி முன்வைக்கும் மற்றொரு வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுடன் சென்று தனது முழு ஆதரவை தெரிவித்தார். தற்போது அவரது டுவிட்டர் பக்கத்தில் போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். அதாவது, ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் ஜல்லிக்கட்டோடு உங்கள் போராட்டத்தை நிறுத்திவிடாதீர்கள்.

விவசாயம், விவசாயிகளின் நலன் பற்றிய போராட்டத்தையும் கையிலெடுங்கள். இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ள அனைத்து இளைஞர்களுக்காகவும் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.