ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவையில் ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு நல்லாட்சியை காரணம் காட்ட சிலர் முற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கடந்த ஆட்சியின் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனன் இந்நிறுவனத்தின் பிரதானியாக செயற்பட்ட போதே இந்த நட்டம் ஏற்பட்டது.
அது மாத்திரமின்றி மஹிந்தவின் குடும்பத்தினர் அமைச்சரவை அனுமதியில்லாது செயற்பட்ட காலப்பகுதியில் அவரின் தன்னிச்சையான முடிவில் விமானங்கள் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய பிற நாடுகள் அதேவகை விமானத்தினை குறைந்த பெறுமதியில் பெற்றிருக்க இலங்கையில் அது மிகக் கூடிய பெறுமதியில் கொள்வனவு செய்ததே நட்டத்திற்கான முக்கிய காரணமாகவும் அமைந்தது.
தற்போது GSP பிளஸ் தொடர்பிலும், அபிவிருத்தி தொடர்பிலும் பல பொய்யான கருத்துக்களை பரப்பி, மஹிந்த அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதோடு குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியினர் இதற்காக பொய் பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்லும் முனைப்பில் தற்போது செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கண்டி தலதாமாளிகைக்கு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததைப் போன்று காலம் தாழ்த்தப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இல்லாது செய்யப்படும்.
மைத்திரி அரசாங்கத்தின் உறுதி மொழிகள் அடங்கிய கொள்கை புத்தகத்தினை வாசித்திடாத கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தில் உள்ள சிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர நிச்சயமானது அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.