மாணவர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த போலீஸ்காரர்: ‘எனக்கு பயம் இல்லை’ என்கிறார்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் இன்று 4-வது நாளாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் மைக் மூலம் போராட்டம் பற்றி பேசி வருகிறார்கள்.

காலை 9 மணி அளவில் மாயஅழகு என்ற போலீஸ்காரர், இளைஞர்கள் கூட்டத்துக்குள் வந்தார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து “மைக்” மூலம் பேச விரும்புவதாக கூறினார்.

இதைக் கேட்டதும் இளைஞர்களும், மாணவர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். “நீங்கள் போலீஸ்காரர். அதுவும் சீருடையில் இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு பேசலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டனர்.

அதற்கு போலீஸ்காரர் மாயஅழகு, “என்னால் பேசாமல் இருக்க முடியாது. மைக் தாருங்கள்” என்று கூறி ‘மைக்’ கை பிடித்து பேசத் தொடங்கினார்.

ஜல்லிக்கட்டுக்காக நடக்கும் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். இந்த மன உணர்வு காவல் துறையில் உள்ள அனைவரிடமும் உள்ளது. ஆனால் பணி நிமித்தம் காரணமாக யாரும் தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய சொத்தான நமது காளை இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. இதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பவன் தமிழனா?

இந்த உலகில் தாய்ப்பால் குடிக்காமல் வளர்ந்துள்ள குழந்தை இருக்கலாம். ஆனால் பசு பால் குடிக்காமல் எந்த குழந்தையுமே வளர்ந்து இருக்காது. அப்படிப்பட்ட நம் உயிரான பசுவை எப்படி அழிய விடலாம்.

விவசாயம் நமது முது கெலும்பாக இருப்பதாக செல்கிறார்கள். ஆனால் நமது விவசாயமும் அழிந்து வருகிறது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் விவசாயம் இயற்கை சார்ந்து இருந்தது. மாட்டு சாணத்தை உரமாக போட்டனர். இப்போது செயற்கை உரத்தை போட்டு மண்ணை கொன்று விட்டனர்.

அடுத்தக்கட்டமாக நமது மாடுகளையும் கொன்று விடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே நாம் தண்ணீருக்காக பக்கத்து மாநிலத்திடம் கை ஏந்தி கொண்டிருக்கிறோம். மாட்டையும் வீழ்த்த நினைப்பதற்கு நாம் உடன்பட கூடாது.

நான் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இதற்காக நான் பயப் படவில்லை. என் வேலையே போனாலும் பரவாயில்லை.

உயர் அதிகாரிகள் என்னிடம் இதற்காக விசாரணை நடத்தக்கூடும். அதற்காகவும் பயம் இல்லை. உங்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு போலீஸ்காரர் மாயஅழகு பேசினார்.

தனது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் என்றும், பஞ்சம் பிழைப்பதற்காக சொந்த மாவட்டத்தில் இருந்து வெளியேறி மதுரையில் வசித்து வருவதாகவும் போலீஸ்காரர் மாயஅழகு தெரிவித்தார். அவரது ஆதரவை இளைஞர்களும், மாணவர்களும் ஏற்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாய அழகை தோளில் தூக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு சென்றனர்.

கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் சங்கர், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து மாணவர்கள் கூட்டம் பகுதிக்கு விரைந்து வந்தார். போலீஸ்காரர் மாயஅழகை வெளியில் வரும்படி அழைத்தார். ஆனால் அவரை விடுவதற்கு இளைஞர்கள் மறுத்தனர்.

மாணவர்கள் கூறுகையில், “எங்களது போராட்டம் தொடர்பான கருத்தைத்தான் போலீஸ்காரர் மாயஅழகு பதிவு செய்துள்ளார். இதற்காக நீங்கள் அவர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் இதே மாதிரி திரண்டு வந்து போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

உடனே போலீஸ் அதிகாரிகள், மாயஅழகு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு போலீஸ் காரர் மாயஅழகை மாணவர்கள் செல்ல அனுமதித்தனர். அவரை போலீசார் விவேகானந்தர் இல்லத்துக்குள் அழைத்து சென்றனர்.

அங்கு போலீஸ்காரர் மாயஅழகிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவரது பணி கால நடவடிக்கைகள் சரிபார்க்கப்பட்டன.

அப்போது சில உளவுப் பிரிவு போலீஸ் தங்கள் செல்போன்களில் போலீஸ்காரர் மாயஅழகை படம் பிடித்தனர். இதற்கு மற்ற போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ்காரர்களுக்கு இடையே இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு செல்போன்களில் பதிவான மாயஅழகின் படம் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில் சீருடை இல்லாமல் கருப்பு உடை அணிந்து வந்திருந்த ஒருவர், “நானும் போலீஸ்காரர்தான். உங்கள் போராட்டத்துக்கு நானும் ஆதரவு தெரிவித்து கொள்கிறேன்” என்று மைக் பிடித்து பேசினார்.

இதனால் போராட்ட கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் போலீஸ் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் அவரை தனியாக அழைத்து சென்று விட்டார்.

இதையடுத்து மாணவர்களிடம் சென்ற உயர் போலீஸ் அதிகாரிகள், “போராட்டம் குறித்து போலீஸ்காரர்கள் பேச வந்தால் அனுமதிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டனர்.