பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியது: கடுகடுப்பில் போயஸ் கார்டன்!

முதல்வர் பன்னீர்செல்வத்தின் கை டெல்லியில் ஓங்கியுள்ளதால் போயஸ் கார்டன் அவர் மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டாவை தடை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கோரிக்கை எழுப்பினார்.

அவருடைய அறிக்கையை கையில் எடுத்துக் கொண்டு பிரதமரை சந்திக்கச் சென்றார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

பிரதமரை சந்திக்க தம்பிதுரைக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நேற்று காலை பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோதும், ‘மோடி சந்திக்க மாட்டார்’ என்றே அ.தி.மு.க தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

ஆனால், பன்னீர் செல்வத்திற்கு முக்கியத்துவம் அளித்த மோடி, அவரை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சசிகலாவின் பார்வை பட்டால் தான் பன்னீர் செல்வம் நடமாடுவார் என்று தமிழகத்தில் கூறப்பட்டு வந்த வார்த்தைகள், டெல்லியில் பொய்யாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சகட்டத்தை தொட்ட பிறகு, அதில் மோடி தலையிட்டு தீர்த்துவைத்தார் என்பதை வெளிக்காட்டுவதில் மத்திய அரசு தெளிவாக இருந்துள்ளது.

அதன்படியே, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரும் முயற்சியில் பன்னீர் செல்வம் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் பீட்டாவுக்கு தடை குறித்த சசிகலாவின் கடிதத்தை கொண்டு சென்ற தம்பிதுரையை சந்திப்பதற்கு மோடி அனுமதி வழங்கவில்லை.

பன்னீர் செல்வத்தின் கை ஓங்க வேண்டும் என்பதில் மோடி தெளிவாக இருந்துள்ளார். இது போயஸ் கார்டனுக்கு சற்று புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், டெல்லியில் பத்திரிகையாளர்களை பன்னீர் செல்வம் சந்தித்தபோது, சின்னம்மா கடிதம் கொடுத்தார் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தினாரே தவிர மேற்கொண்டு எவ்வித தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை.

இதனால், கட்சி வேறு ஆட்சி வேறு என்று பிரித்து பார்ப்பதில் பன்னீர் செல்வம் தெளிவாக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது என அதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.