தமிழர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திய மன்மோகன் சிங்கின் கடிதம்!

உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகிவருகிறது. இளைஞர்களின் உத்வேகத்தை புரிந்து கொண்டு அரசியல் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல, மெரினா பக்கம் ஒதுங்க நினைக்கின்றனர்.

இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்மோகன் சிங் எழுதிய கடிதத்தை இப்போது இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ‘ஹ்யூமன் சொசைட்டி சர்வதேச இந்தியா’ அமைப்பின் மேலாண் இயக்குநர் என்.ஜி. ஜெயசிம்ஹா விடுத்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் ஜெயசிம்ஹா கடிதம் எழுதியிருந்தார்.

பீட்டாவைப் போன்றே இந்த அமைப்பும் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு அமைப்பு. அதன் தலைவர் ஜெயசிம்ஹாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு மன்மோகன் சிங் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஜல்லிக்கட்டை ‘புல்ஃபைட்’ என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். ‘பொழுது போக்கு என்ற பெயரில் காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டை ஊக்கப்படுத்தக் கூடாது’ என்றும் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ”உங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இரு காளைகள் மோதுவதைத்தான் புல்ஃபைட் என்பார்கள். இங்கே காளைகள் மோதுவதில்லை. காளைகளை ஓட விட்டுப் பிடிப்பதற்குப் பெயர்தான் ஜல்லிக்கட்டு. அதுவும் பல விதிமுறைகள் வகுத்த பின்னர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு மிகுந்த ஒரு விளையாட்டாகவேத் தெரிகிறது.

மன்மோகனின் இந்த கடிதம் வெளியானதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்ஜீர் சுர்ஜிவாலா ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழர்களின் கலாசாரத்தையும் பாரம்பர்யத்தையும் மதிக்கிறேன். தங்கள் கலாசாரத்தை பாதுகாத்துக்கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது எனக் கூறியுள்ளார்.