தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஓரிரு நாளில் நடக்கும், வாய்ப்பு இருந்தால் நான் நேரில் வந்து பார்ப்பேன் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பை பொங்கலுக்கு முன்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார். அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும், அதனால் அரசியலமைப்பு சட்டச்சிக்கல் ஏதும் வராது எனவும் வலியுறுத்தி வந்தார். தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, ஜல்லிக்கட்டு குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” அடுத்த சில நாட்களில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துவிடும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க இருக்கிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால், அங்கு வர விரும்புகிறேன், அதை பார்க்க ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.