ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டே நடத்தி தீர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இளைஞர் பட்டாளம் போராட்டத்தில் குதித்துள்ளது.
இதையடுத்து, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்தது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று அதிமுக எம்பிக்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து நேரில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்டத்திற்கு சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களும் ஒப்புதல் வழங்கிவிட்டன.
தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் மூன்று துறை அமைச்சகங்களும் ஒப்புதல் வழங்கியுள்ளன. தமிழகத்தின் எழுச்சியை உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகம்தான், இவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.