நொடிக்கு நொடி பெருகும் எண்ணிக்கையால் மனித கடலாக சென்னை மெரினா கடற்கரை மாறியுள்ளது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரினாவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக வந்து சேர்ந்தனர்.
அனைத்து சாலைகளும் ரோமை நோக்கி என்ற ஆங்கிலத்தில் பிரபலமான வார்த்தை, இன்று அனைத்து சாலைகளும் மெரினாவை நோக்கி.. என மாறிப்போயுள்ளது.
ஆயிக்கணக்கான இளைஞர்கள் வருவதால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
வாகனங்களை நிறுத்தவும் இடமில்லை என்பதால், ஏராளமான இளைஞர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே போராட்டக் களமான மெரினா வருகிறார்கள். சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் குவிந்து வருவதால் மெரினாவுக்கு செல்லும் சாந்தோம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டிய லூப் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் எங்கெங்கு காணினும் மனித தலைகளாகவே தெரிகின்றன.