சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி யுவராஜ்சிங் (150 ரன்), டோனி (134 ரன்) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கு என்றாலும் இங்கிலாந்து வேகமாக நெருங்கி வந்தது. பரபரப்பான இறுதிகட்டத்தில், 9 பந்து எஞ்சியிருந்த போது இங்கிலாந்து கேப்டன் மோர்கன் (102 ரன்) ஆட்டம் இழந்தார். அத்துடன் அவர்களின் நம்பிக்கைை-யும் கரைந்து போனது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 366 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட 35 வயதான யுவராஜ்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
அணியும், கேப்டனும் நம் மீது நம்பிக்கை வைக்கும் போது எப்போதும் தன்னம்பிக்கை வந்து விடும். என் மீது விராட் கோலி நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். இதே போல் சக வீரர்களும், முன்பு போல் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறார்கள். அது தான் இங்கு முக்கியம். எனது திறமையை நிரூபித்து, அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாமா என்று சிந்தித்தேன். அதில் இருந்து மீண்டு இந்த பயணத்தை தொடருவதற்கு நிறைய பேர் எனக்கு உதவிகரமாக இருந்தனர். அதனால் நம்பிக்கையோடு தொடர்ந்து கடினமாக உழைத்தேன். காலம் கனியும் என்பதை அறிவேன்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய முதல் 2-3 ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது. உடல்தகுதியை தக்க வைக்க முன்பை விட அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருந்தது. அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தேன். இருப்பினும் மனம் தளரவில்லை. உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி நிறைய ரன்கள் குவித்தேன். அதன் பலனாக அணிக்கும் திரும்பி விட்டேன்.
ஒரு நாள் போட்டியில் 150 ரன்களை எட்ட வேண்டும் என்பது எனது கனவு. இது தான் எனது அதிகபட்ச ரன்னாகும். அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சதம் கண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இதே போன்று பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
உடல்தகுதியை பேணுவதற்கு உணவுகட்டுப்பாடு அவசியமாகும். 30 வயதை கடந்து விட்டாலே உடல்தகுதி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர், அனில் கும்பிளே போன்ற சீனியர்களிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.
இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.
யுவராஜ்சிங்கும், டோனியும் 4-வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் திரட்டியதை சுட்டி காட்டி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒரு சூப்பர் ஸ்டாரும், ஒரு ராக் ஸ்டாரும்’ வியப்புக்குரிய வகையில் அமைத்து கொடுத்த பார்ட்னர்ஷிப்பை உற்சாகமாக கண்டுகளித்தோம்’ என்று கூறியிருந்தார்.
தெண்டுல்கரின் பாராட்டு குறித்து யுவராஜ்சிங்கிடம் கேட்ட போது, ‘தெண்டுல்கர் என்னை எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிப்பார். அவர் அப்படி அழைக்கும் போது எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கும். எப்போதும் என்னிடம் ஜாலியாக பழகுவார். ஆனால் அவரிடம் இருந்து வாழ்த்துகளை மட்டுமே எடுத்துக் கொள்வேன்’ என்றார்.
இந்திய கேப்டன் விராட் கோலி கூறும் போது, ‘25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மிகச்சிறந்த வீரர்கள் (யுவராஜ்- டோனி) பொறுப்புடன் விளையாடி அணியை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். தொடக்கமும் நன்றாக அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
எங்களது திறமையில் 75 சதவீத மட்டுமே வெளியாகி இருப்பதாக நினைக்கிறேன். எல்லா பேட்ஸ்மேன்களும் ரன்வேட்டை நடத்தினால், இன்னும் அதிகமான ஸ்கோரை எடுத்திருக்கலாம். அதற்குரிய இடமாக கொல்கத்தா அமையக்கூடும்’ என்றார்.
இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இங்கிலாந்து பந்து வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் தாமதமாக வீசியதால் இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு 20 சதவீதமும், இதர வீரர்களுக்கு 10 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது.
தோல்விக்கு பிறகு மோர்கன் கூறுகையில், ‘டாப் வரிசையில் யாராவது ஒருவர் சதம் அடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. எங்களது முழு திறமை இன்று வெளிப்படவில்லை. வெற்றியின் விளிம்புக்கு வந்து தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தனர். இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.