கர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது?

புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே. இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே! இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப்படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை என்கிறோம்.

கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.

அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.

இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.

டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.

இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும். இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.

கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ.. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல். துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்! ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!