நாடாளுமன்ற உறுப்பினர்களை விட முன்னிலையில் இருக்க வேண்டிய கௌரவ பௌத்த பிக்குமார், அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் மாறுகிறார்கள் என்பதால், அப்படியான பிக்கு ஒருவர் எப்படி அரசியல்வாதிகளை விட முன்னிலையில் இருக்க முடியும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், உயரிய மட்டத்தில் இருக்க வேண்டிய பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனமடுவ நகரில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வருவதானது சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த சீரற்ற நிலைமைக்கு இடமளிக்காத வகையில் பௌத்த பிக்குமார் இடையில் வாத விவாதங்கள் ஏற்பட வேண்டும். இது காலத்தின் தேவை.
அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக எடுத்த தீர்மானத்தை விட அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தால், விசேஷமான சமூக செயற்பாட்டுக்கு வழியை ஏற்படுத்தியிருக்கும் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.