ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு சசிகலாவின் முக்கிய அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இனத்தின் அடையாளங்களை, உரிமைகளை, தனித் தன்மைகளைக் காத்திடவும்; மீட்டெடுக்கவும், தனது வாழ்வின் பொன்னான காலங்களை அர்ப்பணித்து உழைத்த புரட்சித் தலைவி அம்மாவின் அயராத முயற்சிகளால் 7.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நடத்திட உதவும் எண்ணத்தில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறப்போகிறது என்ற ஆர்வத்துக்கு அடிகோலியது. ஆனால், பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு 2014-ம் ஆண்டு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை தொடரச் செய்துவிட்டன.

எம் இனத்தின் வீர மரபை வெளிப்படுத்தும் இனிய நிகழ்வான ஜல்லிக்கட்டு நடைபெற்றே தீர வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா பிரதமரையும், மத்திய அரசையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் வழித் தொடரும் தமிழக அரசு, மத்திய அரசையும், நீதிமன்றத்தையும் அணுகி தமிழ் இனத்தின் பண்பாட்டு வழிமுறைகளை எடுத்துரைத்தது.

அம்மாவின் வழி வந்த நான், நம் இனத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் இரு கண்களாகப் போற்றுகிறேன். எனவே, அம்மாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் நானும், மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதோடு, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற அனுதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வலியுறுத்தச் செய்தேன்.

இத்தனை முயற்சிகளை முறைப்படியும், நெறிப்படியும் செய்ததோடு, அதிமுக அரசை இதற்கென தொடர்ந்து போராடச் செய்தேன். கழகப் பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பிரதமரைச் சந்தித்து இது குறித்து பேசியதோடு, என்னென்ன சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வலியுறுத்தினேன்.

அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சியும்; உலகமே வியந்து போற்றும் வண்ணம் மிக மிக கண்ணியத்துடனும், மரியாதைக்குரியதாகவும் இளைஞர்கள், இளம் பெண்களும், மாணவர்களும், தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளும் நாம் வேண்டிய, விரும்பிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நமக்கு மீட்டுத் தந்திருக்கின்றன.

தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மாபெரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் கண்ணியமான வகையில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றிருப்பது, இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழகம் திகழ்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இப்போராட்டத்தில் காவல் துறையினர் சட்டம்- ஒழுங்கை முறையாக பேணிக் காத்திட்ட செயல் மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசு சட்ட அங்கீகாரத்துடன் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்துகிறது.

இந்த இனிய நிறைவை நாம் அடையும் வண்ணம் போராடிய கண்மணிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் ஒத்துழைத்த அனைவருக்கும், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நாம் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த, நமது கலாசார உரிமையான ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற உள்ள நிலையில், மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்பது மற்றும் உங்களின் அன்றாடப் பணிகளை ஆற்றுவது உள்ளிட்ட பொறுப்புகளை உணர்ந்து இந்தப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அருள்கூர்ந்து அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.