ஒரு சமயம் சுரர் அசுரர்கள் யாவரும் பாற்கடலைக்கடைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள். அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின. அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள்.
இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு. பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத் தாயான இவள், தன் பின் இருகரங்களில் தாமரைகளைக் கொண்டும், முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள். பாதங்களில் தேவர்கள அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன.
ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் விரும்பியதை கொடுக்கும் கற்பக விருட்சம், இவளின் செல்வத்தை காவல் புரியும் விநதிய வாசினி எனும் துர்கை, குளிர்ந்த இனபம் நல்கும் சந்திரன் மற்றும் மணமாலையை ஏந்திய தேவப் பணிப் பெண்ணான அப்சரஸ் நிற்கின்றாள்.
இந்த மணமாலையைச்சூட்டித்தான் லட்சுமி பின்னாளில் விஷ்ணுவை மணந்தாள். பெண்களுக்கு விரைவில் திருமணம் நிறைவேற இவளே, தனது பார்வையால் ஆசிர்வதிக்கிறாள்.
இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, வலப்புறத்தே நினைத்த மாத்திரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் உச்சைச்வரஸ் எனும் தெய்வீக குதிரை ஆகியவை விளங்குகின்றன. இவளின் திருவடியை வழிபடுவோர், விரைந்து செயல்படும் ஆற்றல் உறுதி பெறலாம்.