வடக்கையும், யாழையும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாகவே பாவித்து அதனை முற்று முழுதாக ஆக்ரமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக இலங்கையில் தென்னிலங்கைத் தரப்பு அரசியல் வாதிகளின் முக்கிய விமர்சனமாக இருந்தது மீண்டும் புலிகள் என்ற வாதமே.
ஆட்சிக்கு எதிரான சக்திகள் மற்றும் பௌத்த பிக்குகளும் இணைந்து இந்த கருத்தினை முன்வைத்து வந்தததை அவதானிக்க முடியுமானதாக இருந்தது.
அதாவது நாடு இப்போது இயங்கி வருவது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் வழிகாட்டலின் மூலமாகவே என்பதோடு புலம்பெயர் மக்கள் புலிகளே என்று கூறப்பட்டு வந்தது.
அதே சமயம் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆரம்ப காலங்களில் நாட்டில் இப்போது யுத்தம் இல்லை அமைதியடைந்து விட்டது.,
அதனால் நல்லிணக்கம் மட்டுமே இப்போது அவசியம் அதனையே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்து வந்தார்.
இருந்தபோதும் சமீப காலமாக மீண்டும் யுத்தம் ஏற்படுவதனை தடுக்க வேண்டும் என்ற வகையிலும் கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
அதேபோன்று வடக்கில் இராணுவ வசம் இருக்கும் பொது மக்களின் காணிகள் அனைத்தும் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கொடுத்திருந்தார்.
ஆனாலும் இன்றளவும் அவை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் யாழ் கட்டளைத் தளபதி யாழில் இன்னும் புலிகள் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
புலம் பெயர் அமைப்புகளுடன் இணைந்து மீண்டும் தீவிரவாதத்தில் ஈடுபடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் அவற்றை தடுப்பதற்காக, விடுதலைப்புலிகளை கண்காணிக்க நாம் அங்கு நிலை கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தம் மீண்டும் யுத்தம் ஏற்படும் என்பதே இவர்களின் வாதம். அப்படி என்றால் இவர்கள் முன்னாள் போராளிகளை குறிவைத்துள்ளார்களா?
எப்படியாயினும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு கொண்டே வருகின்றனர். என்பதே உண்மை.
இவ்வாறான நிலை அவர்களுக்கு தொடரும் போது அவர்களுடைய மனம் எத்தகைய தாக்கத்திற்கு உள்ளாகும் என்ற கேள்விக்கு எவரும் பதில் கூற முடிவதில்லை.
அதேபோன்று தொடர்ந்தும் யாழை தீவிரவாத பிரதேசமாக சித்தரிக்க நினைத்து இவ்வாறாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதா?
மிக முக்கியமாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவம் இழுபறியாக இருந்து வருகின்றது. அப்படியாயின் இலங்கை இராணுவம் ஜனாதிபதியின் கட்டளையையும் மீறி செயற்பட்டு வருகின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றது.
யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையிலும் இன்றும் வடக்கின் நிலை யுத்த காலத்தை விடவும் பின்தங்கியே செல்கின்றது.
இவை போதாது என யாழில் விடுதலைப்புலிகள் என்ற வகையிலும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றது. ஆட்சியாளர்களும் சரி ஆட்சிக்கு எதிரானவர்களும், இராணுவமும் கூட இந்த விடயத்தில் ஒரே கண்ணோட்டத்திலேயே இருந்து வருகின்றது.
இவற்றுக்கான முக்கிய காரணம் வடக்கை தென்னிலங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக என்றே தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் புலிகள் இருக்கின்றார்கள் என்ற கருத்தை வழுப்படுத்துவதன் ஊடாக அங்கு இராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து தென்னிலங்கை சமூகத்தை அங்கே திணிப்பதே இப்போதைய முக்கிய குறிக்கோளாக காணப்பட்டு வருகின்றது.
அதற்கான செயற்பாடுகளையே இராணுவம் செய்து வருகின்றது. தொடர்ந்தும் ஜனாதிபதியும் தேர்தல் வாக்குறுதிகளை மறந்து நடந்து வருவதன் மூலம் அவரும் கூட இந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் யாழை சுதந்திரமாக இயங்கவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளில் இலங்கை அரசும், இராணுவமும் இணைந்து, தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவே கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.