ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் நடிகை நயன்தாரா!

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆரம்பித்த இப்போராட்டம் இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட் மாட்டோம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். கருப்பு நிறத்தில் டாப்ஸ் அணிந்து முகத்தை கருப்பு துணியால் மூடியபடி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நயன்தாரா போராட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னதாக ”இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இநத தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது” என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நயன்தாரா அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.