உலக பேட்மிண்டன் தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவாங்கை எதிர்கொண்டார். இதில் சாய்னாவிற்கு தாய்லாந்து வீராங்கனை கடும் சவாலாக விளங்கினார். என்றாலும் சாய்னா முதல் செட்டை 22-20 எனக்கைப்பற்றினார். 2-வது செட்டையும் 22-20 எனக்கைப்பற்றி இந்த வருடத்தின் முதல் கிராண்ட்பிரிக்ஸ் ஓபனை சாய்னா கைப்பற்றினார். இந்த வெற்றியை பெற சாய்னாவிற்கு 43 நிமிடங்களே தேவைப்பட்டது.
ரியோ ஒலிம்பிக் தொடருக்குப்பின் காயத்தால் விளையாடாமல் இருந்த சாய்னாவிற்கு இந்த வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சாய்னாவின் 23-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சாய்னா, அதன்பின் தற்போதுதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.