தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தனது சுயலாபத்திற்காக பிரபாகரன் தட்டிக்கழித்து விட்டார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழ் தலைமைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்காக பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை எல்லாம் அதனை தமது சுயஇலாபத்திற்காக கைவிட்டனர்.
பிரபாகரனும் அவ்வாறே. இலங்கை இந்தியா ஒப்பந்தம், பிரேமதாஸா, சந்திரிக்கா, ரணில், மகிந்த ஆகியோரின் ஆட்சி காலத்தில் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கை கூடி வந்த வேளை எல்லாம் அதனை தனது சுயஇலாபத்திற்காக கைவிட்டனர்.
வடமாகாணத்திற்கு கொடுத்தது 32 பில்லியன். செலவழித்தது 1.2 பில்லியன்.
கடந்த வருடம் வடமாகாண சபைக்கு 32 பில்லியன் நிதி கொடுக்கப்பட்ட போதும் 1.2 பில்லியன் நிதியினையே செலவழித்து உள்ளனர். நிதியமைச்சர் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என பெருமளவான நிதியினை வடக்குக்கு ஒதுக்கும் போதும் , அதனை செலவு செய்யாமல் மாகாண சபையினர் செயற்படுகின்றனர்.
பொருத்து வீடு அரண்மனை.
கிடைப்பதனை பெற்றுக்கொள்ள வேண்டும். முன் நிர்மாணிக்கப்பட்ட வீடு என்பது குடிசைகளிலும் , தகர கொட்டகைகளிலும் வாழும் எம் மக்களுக்கு அரண்மனை. அந்த அரன்மையில் 10 தொடக்கம் 15 வருடங்கள் ஆவது அந்த மக்கள் சந்தோசமாக வாழட்டும். கிடைப்பதனை ஏன் வேண்டாம் என கூற வேண்டும்.கிடைப்பதனை பெற்றுக்கொள்வோம்.
நீதி அமைச்சுக்கு சொந்தமான காணியை மக்களுக்கு வழங்க சம்மதம்.
யாழ்.குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணி ஒன்றினுள் 70 குடும்பங்கள் அத்துமீறி வீடமைத்து வாழ்வதாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களை அங்கிருந்து எழும்பும் மாறு நீதிமன்று அறிவித்து இருந்தது.
இது தொடர்பில் நீதி அமைச்சருக்கு நான் தெரிய படுத்தியதை அடுத்து அந்த மக்கள் 91ம் ஆண்டு முதல் அக்காணியில் வாழ்வதனால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் எனவும் ,
நீதி அமைச்சுக்கு வேறு இடத்தில் காணிகளை அடையாளம் காணுமாறு நீதி அமைச்சர் கடிதம் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதி , அரச அதிபர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து உள்ளார்.
நாவற்குழியில் வாழும் தமிழ் மக்களுக்கு விரைவில் வீடு.
நாவற்குழியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு மிக விரைவில் வீடமைந்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைத்து கொடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய்கிறோம்.
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் தொடர்ந்து கட்சி தனது நிலைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. என தெரிவித்தார்.