இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது என வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற உழவர் பெருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தைப்பொங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கே உரியதொரு கொண்டாட்டம் என்பது போய் முழுத்தமிழ் இனத்தையும் ஒற்றுமைப்படுத்தி ஒன்றாகச் சேர்த்து கொண்டாட வழிவகுக்கும் ஒரு விழாவாக மாறியுள்ளது.
தைப்பொங்கலானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ் நாடு, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மொரிசியாஸ் போன்ற தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
சென்ற வாரம் என் முன்னிலையில் கனடாவிலும் கொண்டாடப்பட்டது. உழைக்கும் மக்களானவர் இயற்கைக்கும் பிற உயிர்களிற்குந் தெரிவிக்கும் நன்றியறிதலாகவே பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் பற்றி சங்க இலக்கியங்களில் கூட கூறப்பட்டுள்ளது. ‘தைத்திங்கள் தண்கயம் படியும்’ என்றது நற்றிணை. ‘தைத்திங்கள் தண்ணியதரினும்’ என்றது குறுந்தொகை. ‘தைஇத்திங்கள் தண்கயம் போல்’ என்றது புறநானுறும் ஐங்குறுநூறும்.
எனவே தொன்று தொட்டு தைப்பொங்கல் விழா நடந்து வந்துள்ளது என்பது இதனால் விளங்குகின்றது. அத்துடன் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர் கூட தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள்.
சென்றவாரம் கனடாவில் இஸ்லாமிய சகோதரர்கள் என்னைச் சந்தித்து தைப்பொங்கல் தங்களுக்கும் ஒரு பெருநாள் என்றார்கள்.
இவ்வாறான தைப்பொங்கல் கொண்டாட்டம் முழுத்தமிழ் இனத்தையே சேர்க்க வல்லதாக இருக்கும் போது சகல நாடுகளிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களும் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
எவ்வாறு நாங்கள் நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்தோமோ அதேபோல் உலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் சேர்ந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது. இறைவன் அருளால் அவ்வாறான அமைப்பொன்று உருவாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
சாதி, மத, வர்க்க பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும். அதற்குத் தைப்பொங்கல் மையமாக அமையட்டும்.
தைப்பொங்கல் விழாவை போகிப் பொங்கல்இ தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் எனத் தொடர் நிகழ்வுகளாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றார்கள். போகி பண்டிகை என்பது பழையவற்றைக் களைதலாகும்.
தைப்பொங்கலுக்கு முதல் நாள் தேவையற்ற பழையவற்றை எரித்து சாம்பலாக்கி புதிய வாழ்க்கைக்கு தயார் ஆவார்கள். தைப்பொங்கல் தைமாதம் முதல் நாள் கொண்டாடப்படுகின்றது.
மாட்டுப் பொங்கல் என்பது உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நன்நாள். காணும் பொங்கல் அன்று மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.
இலங்கையில் இது கொண்டாடப்படுவதில்லை. போகிப் பொங்கலும் சில இடங்களில்தான் கொண்டாடப்படுகிறது. ஆனால் தைப்பொங்கல் அன்றே பழையன களைந்து புதியன உடுத்தலும் உறவினரைக்காணும் நிகழ்வுகளும் இங்கு நடைபெறும்.
தை மாதம் பிறந்து விட்டால் உழவுத் தொழில் புரிகின்றவர்கள் வீட்டில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடத் தொடங்கும். வீட்டிலுள்ள நெற்பெட்டகங்களிலும் மற்றும் நெற்குதிர்களிலும் நெல் மணிகள் நிறையத் தொடங்கும். உழவர்கள் மனம் பொங்கிப் பூரிக்கும்.
களனி திருத்தி, வயல் உழுது, பசளையிட்டு, நெல் விதைத்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து விளைவித்த நெல் மணிக் கதிர்களை அருவி வெட்டி சூடு மிதித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று களஞ்சியப்படுத்துவர்.
கூடையில் இருந்து புதிய நெல் மணிக்கதிர்கள் கொஞ்சத்தை எடுத்து குற்றி அரிசியாக்கி புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு பொங்கலுடன் பழங்கள், பலகாரம் இன்னும் மங்கலப்பொருட்களாக மஞ்சள், இஞ்சி, கரும்பு, கற்கண்டு என சேர்த்துப் படைத்து இதமான இயற்கையை வழங்கிய இயற்கைத் தெய்வமான ஞாயிறை வணங்கி மனைவி மக்கள் சுற்றம் சூழ தித்திக்கும் இனிப்புப் பொங்கலை பகிர்ந்துண்டு மகிழ்கின்ற இனிய நாள்த்தான் தைத்திருநாள்.
சூரியனைத் தெய்வமாக வணங்க முன்வராதவர்களும் ஞாயிறு இன்றி இஞ்ஞாலம் இல்லை என்பதை உணர்ந்தே இருப்பார்கள்.
தைத் திருநாளில் தைப்பொங்கல் நிகழ்வுகளுடன் மேலதிகமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல்இ உறியடித்தல்இபட்டம் ஏற்றும் போட்டிகள் என பலதரப்பட்ட போட்டிகளிலும் மக்கள் ஈடுபடுவதுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களுக்கு அதற்கென விஷேட பயிற்சிகள் அளிக்கப்பட்ட சிறந்த காளைகள் கொண்டுவரப்பட்டு அக்காளைகளை அடக்குகின்ற போட்டிகள் மஞ்சுவிரட்டுஇ வட்ட மஞ்சுவிரட்டுஇ வெளிவிரட்டு எனப் பலவிதமாக முன்னெடுக்கப்படும்.
மஞ்சுவிரட்டு என்பது விளையாட்டுத்திடலில் வீறுகொண்டு நுழைகின்ற காளையை குறிப்பிட்ட தூரத்தில் அதன் ஏரியை அதாவது முதுகுப்புற மேற்பாகத்தை அழுத்திப்பிடித்து அடக்குவது.
வட்டமஞ்சுவிரட்டு என்பது பத்து மீற்றர் நீளகயிற்றில் கட்டப்பட்ட திமிறுகின்ற காளையை ஏரியைப்பிடித்து அடக்கி நிலத்தில் விழ வைப்பது. மூன்றாவது வகை வெளிவிரட்டு.
இது திறந்த வெளியில் அல்லது வீதியில் ஓடுகின்ற காளையை துரத்திப்பிடித்து அடக்கி பணிய வைப்பது. இவ்விளையாட்டுக்களில் ஆதிகாலத்தில் திருமணம் செய்ய இருக்கின்ற இளைஞர்களும் ஈடுபடுவார்கள்.
ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவல், மற்றும் இளவட்டக்கல் தூக்கல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற ஆடவர்களை மட்டுமே வசதி படைத்த திருமண நங்கைகள் தமது துணைவர்களாக அந்தக் காலத்தில் தெரிவு செய்வர்.
இந்த நிகழ்வுகள் மனிதர்களுக்கு மட்டும் உரித்தான போட்டிகள் என்று கூற முடியாது. பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் கூடவீரியமுள்ள சந்ததியைத் தோற்றுவிப்பதற்காகப் பலம் பொருந்திய துணையைத் தேர்வு செய்வன.
அவற்றின் பலமானது பலவிதங்களில் பரீட்சிக்கப்படுவன. ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தியாவில் பன்நெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இப் போட்டிகளை அரசு தடுத்து நிறுத்த முயல்வதும் அதற்கு எதிராக பல அணிகள் போர்க்கொடி தூக்குவது தமிழ் நாட்டில் இடம்பெற்றுவருவதும் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும்.
இருசாராரும் முன்வைக்கின்ற விடயங்களில் பல உண்மைத்தன்மைகள் காணப்படுகின்ற போதும் தொன்றுதொட்டு இடம்பெற்று வந்த பாரம்பரிய விளையாட்டுக்கலைகளை திடீரென்று மாற்றுவது சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும். அது தான் இன்று தமிழ் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.
நேற்றைய தினம் தொடர்புடையவர்கள் சில உடன்படிக்கைகளுக்கு வந்துள்ளாதாகக் கேள்வி. பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இந்திய மத்திய மற்றும்மாநில அரசுகள் இப்பிரச்சனையை அணுகி உரிய தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்.
இதே போன்று உறியடித்தல் போட்டிகள் என்பன பெரும்பாலும் இளைஞர் யுவதிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற ஒரு போட்டியாகும்.சில போட்டிகள் கண்ணைக்கட்டி, தொங்குகின்ற உறியை அடிப்பதும் வேறு சில விழித்துப் பார்த்தபடி மேலும் கீழுமாக ஆடுகின்ற உறியை சரியான தருணத்தில் குறி பார்த்து அடிப்பதும் ஆவன.
இவை போட்டியாளர்களிடையேயும் பார்வையாளர்களிடையேயும் குதூகலத்தைத் தோற்றுவிக்கின்ற ஒரு விளையாட்டு. வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பட்டம் விடும் போட்டிகள் முக்கிய இடம்பெறுகின்றன.
விதவிதமான பட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றின் சமச்சீர் சற்றும் குலையாது மிகக் கனகாத்திரமான முச்சைகளில் இருபது இருபத்தைந்து பேர் கூடி நின்று பட்டங்களை ஏற்றுவார்கள்.
இவ்வாறான பட்டங்களின் அழகை வல்வெட்டித்துறைக் கடற்கரையில் ஏற்றப்படுகின்ற பட்டப் போட்டிகளில் கண்டு இரசிக்கலாம். கப்பல் கட்டுவதில் வல்லமை படைத்த வல்வெட்டித்துறை கலைஞர்கள் பட்டம் கட்டுவதிலும் கைதேர்ந்தவர்கள். சென்ற வருடம் குறித்த பட்டம் விடும் போட்டிகளைஎன்னால் கண்டு இரசிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த வருடம் நடைபெற்ற பட்டம் ஏற்றும் போட்டிக்கு செல்ல முடியாமல் நான் வெளிநாட்டில் இருந்த போதும் சுமார் முப்பது அடிக்கு மேற்பட்ட ஓணான் வடிவிலான பட்டம் முதலிடம் பெற்றதாக அறிந்து கொண்டேன்.
இந்த வகையில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை உடைய தமிழ் மக்கள் ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்ற கருப்பொருளுக்கு அமைவாக பல தொழில்களிலும் சுற்றித்திரிந்து ஈற்றில் ஏரால் உழும் தொழிலைச் செய்யும் உழவர்களைப் பின்பற்றியே உலகம் செல்லும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு வளம் சேர்ப்பவர்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது.
எமது படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்.
தமிழ் மக்கள் விவசாயத்தின்பால் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்கின்ற நன்மைகளையும் கண்ணுற்ற பலர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.
விரைவில் இவ்வாறு கையகப் படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறி இருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் ஒரு சிறு பகுதிகூட விவசாய முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது.
ஏதாவது காரணங்களால் சில நிலங்களில்விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து அக் காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப்பேற்று அந் நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம் எமது உற்பத்திகள் அதிகரிப்பதுடன் நிலங்களும் பாதுகாக்கப்படுவன.
வெளிநாட்டில் உள்ள நில சொந்தக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து அனலைதீவு போன்ற இடங்களில் இருக்குந் தரிசு நிலங்கள் எமது விவசாய அமைச்சினால் பொறுப்பேற்று சொந்தக்காரர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் நன்மைதரும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
எவ்வாறு மழைநீர் ஒருதுளி கூட கடலை அடையாது சேமிக்கப்பட வேண்டுமோ தரிசு நிலங்களும் உரியவாறு பயன்படுத்தாமல் வெட்டியாக வைத்திருக்கப்படாது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடந்த வருடம் உழவர் திருநாள் நிகழ்வுகளுக்கு இந்தியாவிலிருந்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை சிறப்பு விருந்தினராக எமது கௌரவ அமைச்சர் அவர்கள் இங்கே அழைத்துவந்திருந்தார்கள்.
அதே போன்று இம்முறை ரேவதி மாரிமுத்து இங்கே வரவழைத்து சூழலியல் விவசாய செயற்பாடுகள் தொடர்பில் உங்களுடன் உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்துள்ளார் கௌரவ விவசாய அமைச்சர் அவர்கள்.
அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் எமது அன்பான அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்திருக்கும் திருமதி ரேவதி மாரிமுத்து அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவையனைத்திற்கும் மேலாக இன்றைய இந்த நிகழ்வுகளில் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் 2017ம் ஆண்டு எம்மனைவருக்குஞ் சுபீட்சமுள்ள ஒரு ஆண்டாக மிளிர வேண்டும் என வட மகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.