இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சுவீடனில் ஸ்ரொக்கொம் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி கொள்கை மத்திய நிலையத்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விடயத்தை குறிப்பிட்டார். இலங்கையில் சமாதானம் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் மங்கள சமரவீர அங்கு உரையாற்றுரகயில்: தற்பொழுது நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதன் பலன்களை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பொருளாதார பெறுபேறுகள் மூலம் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களுக்கும் உதவ முடிந்துள்ளது.
சமாதானத்தின் பெறுபேறாக நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் அதன் மூலமான நன்மைகளை அனுபவிக்க முடிந்துள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தில் வர்த்தக மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
இலங்கை நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்காக காட்டிவரும் அர்ப்பணிப்பு, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றமும், ஒன்றியமும் சிபார்சு செய்துள்ளன. இலங்கை இந்து சமுத்திரத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்துவதற்கான அடிப்படை கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்காக ஹம்பாந்தோட்டை, கொழும்பு கிழக்கு, மற்றும் திருகோணமலை அபிவிருத்தி நடவடிக்கைகளும், பலாலி விமான நிலைய அபிவிருத்தியும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டளவில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்ப டுத்தப்பட்டு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். இலங்கை பாரிய வளர்ச்சிக்கான பரிமா ற்றத்தை பெற்றுள்ளது. இதனால், முன்னரிலும் பார்க்க இன்று சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும், நட்புறவும் அவசியமாகும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.