யாருடைய ஆதரவும், ஆலோசனையும் தேவையில்லை: ஒற்றுமையே முக்கியம் : சிம்பு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

சினிமா நடிகர்கள், பிரபலங்கள் என பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதில் குறிப்பாக லாரன்ஸ், ஆரி, சவுந்தர், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் மெரினாவிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். சிம்புவும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

ஜல்லிக்கட்டு நடத்த அறவழியில் தொடங்கப்பட்ட போராட்டம் அந்நிய சக்திகளால் வேறுவழிக்கு போகாமல் தடுப்பதற்காக நாம்ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நம்மை பிரிக்க நடக்கும் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், போராட்டத்திற்கு யாருடைய ஆதரவும், ஆலோசனையும் நமக்கு தேவையில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தைரியமாக இருக்க வேண்டும்.

மேலும் படித்தவர்கள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள் போராட்டத்தை நல்லமுறையில் வழிநடத்தவும், நமக்கு நாமே சண்டையிடக்கூடாது என்றும் கூறிய சிம்பு போராட்டம் குறித்து என்ன முடிவு எடுத்தாலும் அனைவரும் கலந்தாலோசித்து எடுக்கும்படி கூறியுள்ளார்.