ஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இவர் எழுதி, பாடி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற அவசியத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எடுத்துள்ள போராட்டத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் கைகொடுத்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைக்காக சமூக அக்கறை கொண்ட பாடல்களை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘டக்கரு டக்கரு’ என்ற ஆல்பத்தை வெளியிட்டு இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்கா நல்லூர், கோவை, மெரீனாவில் நடக்கும் போராட்டத்துக்கு நேரில் சென்று எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால், கோவையில் நான் கலந்துகொண்டபோது அங்கே நடந்த சில விஷயங்கள் என்னை மிகவும் புண்படுத்திவிட்டது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது யாரென்று தெரியாத சிலபேர் இந்த போராட்டத்தை திசை திருப்பும் விதமாக தேச விரோத செயல்களை முன்னிறுத்தி கோஷமிடுகின்றனர். என்னையும் தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகிறேன். நான் ஒருபோதும் தேச விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன்.
அதுதவிர, இந்து-முஸ்லீம் பிரச்சினைகளை பற்றியும் அங்கே பேச ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலபேர் கெட்ட வார்த்தைகளில் வாசகங்களை எழுதி, கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் குழுமியிருந்த வ.உ.சி. மைதானத்திற்கு வெளியே யாரென்றே தெரியாத சிலபேர் கெட்ட வார்த்தைகளால் மத்திய அரசை வசைபாடிக் கொண்டிருந்தனர்.
எதற்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றும் நானும் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும். இந்த பிரச்சினையை திசை திருப்பி விடாதீர்கள். ஜல்லிக்கட்டுக்கு வெற்றி கிடைத்தால்தான் இத்தனை இளைஞர்களின் போராட்டத்திற்கு மரியாதை கிடைக்கும்.
இன்னும் சிலபேர் என்னை அரசியலுக்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு அரசியலுக்கு வருவதற்குண்டான அறிவோ தகுதியோ கிடையாது. எனக்கு தெரிந்த கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடுபடுகிறேன். ஆனால், அதை பயன்படுத்தி என்னை அரசியலுக்குள் வரச்சொல்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இந்த போராட்டத்தை அரசியல் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை. நல்ல விஷயத்துக்காக எடுக்கப்பட்ட போராட்டத்தில் அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.