மனித உடலுக்கு முக்கியப் பிரதானம் காற்று. அதையடுத்து தான் உணவு, நீர் எல்லாம். அந்த காற்றை முறைப்படுத்தி, நம்முடைய உடலுக்குள் அனுப்புவது நுரையீரலின் வேலையாக இருப்பதால், நுரையீரலை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியமானது.
நுரையீரல் அசுத்தமாகும் போது தான், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. ஆஸ்துமா பிரச்னையால் நுரையீரல் பாதிக்கப்படும். ஆஸ்துமா பிரச்னை வெறும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மட்டுமே வருவது கிடையாது. அது பரம்பரை வழியாகவும் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1990 களில் 183 மில்லியனாக இருந்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு அது 242 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் ஆஸ்துமா வரும் முன்பாகவே அதை நாம் அடையாளம் காணாமல் விடுவதுதான்.
ஆஸ்துமா உண்டாவதற்கான பொதுவான சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகள் தென்படும்போது நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. அவை தான் என்னென்ன?
அடிக்கடி வறட்டு இருமல் வந்தாலோ, அதிலும் குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அது ஆஸ்துமாவின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
விசில் சத்தம் போலவோ அல்லது தொடர்ந்து அடுக்கடுக்காகவோ தும்மல் வந்தாலும் உடனடியாக டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
மார்புப் பகுதியில் ஏதாவது வெயிட் அழுத்துவது போன்று உணர்வது,
மூச்சுவிட சிரமப்படுவது,
உடற்பயிற்சி செய்தால் உடனே சோர்வடைந்துவிடுவது அல்லது பலவீனமாக உணர்வது,
சோர்வாக இருப்பது, அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாவது, சிடுசிடுவென அடுத்தவரிடம் எரிந்து விழுவது ஆகியவை கூட, ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள் தான் என்று கூறப்படுகிறது.
ஆஸ்துமா வந்தால், நுரையீரல் செயல்பாடுகள் தாமதமாகும்.
அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கில் தண்ணீர் வடிதல், மூச்சு முட்டுதல், குளிர்ச்சியான பருவ காலங்களில் மூச்சுத் திணறல் ஆகியவை உண்டாகும்.
தொண்டை வலியும் தலைவலியும் கூட உண்டாகும்.
ஏன்… ? சரியாக தூக்கம் வர மறுக்கிறதா? அதுகூட ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதனால் மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது ஆரம்ப காலத்திலேயே ஆஸ்துமா உண்டாவதைத் தடுக்க முடியும்.