வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

இலங்கையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பது தொடர்பில் அரசாங்கம் பதிலேதும் கூறாமல் காலத்தை இழுத்தடித்துச் செல்வதைக் கண்டித்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உடன் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாடு செய்ததன் பின்னர் ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் ஏ9 வீதியோரத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினையில் ஆர்வம் கொண்டிருப்பவர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பன்னிரண்டுபேர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் ஏனையோர் அவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்து தீர்க்கமான ஒரு பதில் கிடைக்கும் வரையில் சாகும் வரையிலான இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது