தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்று போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் வற்புறுத்தியும் போராட்டக்காரர்கள் மறுத்த காரணத்தால் அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி வருகிறது. சில இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசினார்கள்.
போலீசார் நடத்திய தடியடியில் சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் சென்னையில், திருவல்லிக்கேணியில் மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சில இடங்களில் டயர்களில் தீவைத்துக் கொளுத்தினார்கள். இப்படி தீவைப்பு, தடியடி, கல்லெறிதல் என தமிழ்நாடு போர்க்களமாக காட்சி அளிக்கிறது.
மேலும் தமிழக தலைமைச் செயலாளரிடம் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலைமை சீரடையவில்லை எனில், மத்திய பாதுகாப்பது படை அனுப்பப்படும் என்றும் அதற்காக படைகள் தயாராக உள்ளன எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு துரித கதியில் மத்திய படைகளை அனுப்பி ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களைத் தடுப்பதாக கூறி ஆதிக்கம் செலுத்த துடிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.