தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ராவிராஜின் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மீளவும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குச் சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து, சந்தேக நபர்களை விடுதலை செய்திருந்தது.
இந்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரரோ அல்லது மனுதாரர் சார்பில் சட்டத்தரணியோ நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவித்து இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மீளவும் மேல் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேன்முறையீட்டு மனு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது பற்றி தமக்கு தெரியாத காரணத்தினால் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என ரவிராஜின் மனைவி சசிகலா புதிய மேன்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.