திறைசேரி முறி விநியோக மோசடி குறித்து விசாரிக்க விசேட விசாரணை ஆணைக்குழுவை அமைக்க ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானமானது குதிரை பாய்ந்தோடிய பின்னர் கதவை பூட்ட முனைவதைப் போன்றதென ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவானது ஆரம்பித்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.எனினும், ஒரு வருடம் பூர்த்தியடைந்த பின்னரே விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
காலம் கடந்துள்ள போதும் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பது நல்லதொரு விடயமெனவும் அவர் கூறினார்.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
திறைசேரி முறி விநியோக மோசடி குறித்து கோப் குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது. மிகவும் காலம் கடந்த பின்னரே ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.
அதேநேரம், திறைசேரி முறி விநியோக சர்ச்சை குறித்த பாராளுமன்ற விவாதத்தை முடக்கும் நோக்கிலேயே உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனமான லங்கா ஹோஸ்பிட்டலின் பணிப்பாளர் சபையில் உள்ள பௌத்த மத குரு ஒருவரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பௌத்த குருமார் தற்பொழுது பௌத்த தர்மத்தைவிட வேறு விடயங்களையே போதிக்கின்றனர்.
மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் சபை முதல்வர் கிரியல்ல எழுந்து வழக்கு இலக்கத்தைக் கூறி விவாதம் நடத்த முடியாது என்பார். இதற்கு ஆதரவாக சபாநாயகரும் தீர்ப்பு வழங்குவார். இதுதான் நடக்கப் போகிறது.
இருந்தபோதும் திறைசேறிமுறி மோசடி குறித்த விவாதத்தை முடக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.
நீதிமன்றத்துக்குச் சென்றார்கள் என்ற காரணத்துக்காக சகல செயற்பாடுகளையும் முடக்குவதற்கு இடமளிக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.