அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்..! வடக்கு முதல்வர்!!

உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர்,

தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தாம் கருதுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோமோ, அதனை போலவே உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. இறைவன் அருளால் அவ்வாறான அமைப்பொன்று உருவாக வேண்டும் என தாம் பிரார்த்திக்கின்றேன்.

இதேவேளை, சாதி, மத பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரின் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.