ஜோதிடத்தினால் நாட்டின் ஆட்சியை ஒருபோதும் மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பகுதியில் உதாகம்மான வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சனிப்பெயர்சி என தெரிவித்து எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
எனினும், கூட்டு எதிர்க்கட்சியினருக்கு சாதகமான நாள் என்பதனாலேயே, குறித்த தினத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். ஜோதிடத்தை நம்பியே கூட்டு எதிர் தரப்பினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தனர்.
ஜோதிடத்தினால் கிரக மாற்றம் ஏற்படவுள்ளதாகவும், இதன் பிரகாரம் சனி பெயர்ச்சி எதிர்வரும் 27 ஆம் திகதி ஏற்படவுள்ளதாகவும் ஜோதிடம் அறிவித்துள்ளது.
எனவேதான், ஆடசி மாற்றம் செய்வதற்கான அடித்தளத்தை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோதிடரை நம்பியே தோல்வியை சந்தித்தார். எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினருக்கு இருக்கும் பலம் கூட இல்லாமல் போகலாம்.
ஜோதிடர்கள் சிலர் தமது சுய இலாபத்துக்காக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பொய் வார்த்தைகளை கூறி வருகின்றனர். இவை மக்களை திசை திருப்ப செய்யும் கூட்டு எதிர்க்கட்சியின் உத்தியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறும் பொதுக்கூட்டத்திற்கு “திருடர்களுடன் ஒன்று கூடுவோம்” என பெயர் மாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.