முச்சக்கர வண்டி சங்கத்தின் அங்கத்துவத்தை புதுப்பிப்பதில் போக்குவரத்து அமைச்சரின் அசமந்த போக்கு!!

மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கும், நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கும் கடந்த வருடம் வடமாகாண போக்கு வரத்து அமைச்சர் உற்பட13 அரச உயர் அதிகாரிகளுக்கு நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக எவ்வித பலனும் கிடைக்கவில்லை என மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் அங்கத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடையம் தொடர்பாக மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் அங்கத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கும், நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் 13 அரச உயர் அதிகாரிகளுக்கும் நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தோம்.

ஆனால் இது வரை எங்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை. பின்னர் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் சங்க உறுப்பினர்களும், ஊடக நண்பர்களும் மன்னார் பிரஜைகள் குழுவும் இணைந்து கொடுத்த உயர் அழுத்தத்தின் காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் வடமாகாண போக்கு வரத்து அமைச்சரினால் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடல் அமைச்சரின் சுய நலம் கருதியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த கலந்துரையாடலில் அமைச்சரின் கொள்கை பரப்பு கருத்துக்கள் அங்கு வெளியிடப்பட்டது.

குறித்த கருத்துக்களை தவிர இன்று வரை வேறு எதனையும் எங்களுக்கு செய்த தரவில்லை.

இந்த நிலையில், மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரிடமும் வாகனம் தொடர்பான ஆவணங்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதிற்கு அமைவாக அணைத்து ஆவணங்களும் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் 14 உறுப்பினர்களும் இல்லாது தன்னிச்சையாக செயற்படும் தலைவர் மற்றும் அவரினால் உருவாக்கப்பட்ட ரௌடித்தலைவர் (பார்க தலைவர்) உற்பட ஏனைய சில உறுப்பினர்களை வரவழைத்து மிரட்டல் கூட்டம் நடாத்தப்பட்டது.

ஒரு சில உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் தொடர்பான பல பிரச்சினைகளும் தனியார் பஸ் நிலைய பகுதியில் நடந்தேரியுள்ளது.

குறித்த அனைத்து பிரச்சினைகளும் மன்னார் மக்கள் நன்கு அறிந்தள்ளதோடு இவ்விடையம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து வடமாகாண போக்குவரத்து அமைச்சையோ அல்லது காவல் துறையினரையோ எவ்விதத்திலும் நாங்கள் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்விடையத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற வகையில் குறித்த மகஜரை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இதன் மூலம் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கும், நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு சிறந்த சேவையினை ஏற்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் அங்கத்துவர்கள் விடுத்துள்ள மகஜரில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.