ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களும் இந்த போராட்டங்களுக்கு பெரிய ஆதரவை அளித்து வந்தனர்.
தொடர் போராட்டங்கள் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட உடனேயே ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டங்கள் வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தற்காலிகமாக இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக புதிய நிரந்தர சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட முன்வரைவு நேற்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் போராட்டத்திற்கான வெற்றி கிடைத்து விட்டதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் நேற்று காலை காவல்துறையினர் ஈடுபட்டனர். போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அது கலவரமாக உருவெடுத்தது. இதனையடுத்து போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று மாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இருப்பினும், சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் ஒருவாறு நிலைமை கட்டுக்குள் வந்தது.
மெரினாவில் இருந்த பெரும்பாலான போராட்டக்காரர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியெற மறுத்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 300 பேர் இன்னும் அங்கேயே இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது எடுக்கப்பட்டுள்ளது நிரந்தர தீர்வா என்று சந்தேகத்தை எழுப்பினர்.
ஆனால், மெரினாவில் நேற்று இரவு மட்டும் தங்கிவிட்டு காலையில் வெளியேறுவிடுகிறோம் என்று அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.