கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் காண 20 ஓவர் போட்டி உதவும்: கேப்டன் விராட்கோலி!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 10 ரன்னே எடுத்ததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு சற்று பலவீனமாக இருந்ததால் இங்கிலாந்து அணி எதிர்பார்த்ததை விட அதிகமாக ரன் சேர்த்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி கண்டதால் இந்திய அணியால் முழுமையாக தொடரை வெல்ல முடியவில்லை. 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் 55 ரன்கள் சேர்த்த கேப்டன் விராட்கோலி ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்து அதிவேகத்தில் 1,000 ரன்னை கடந்து சாதனை படைத்தார். அவர் 17 இன்னிங்சில் 1,035 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிவில்லியர்ஸ் கேப்டன் பதவியில் அதிவேகத்தில் ஆயிரம் ரன்களை 18 இன்னிங்சில் கடந்ததே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி கொல்கத்தாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்பு நமது கடைசி ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். இதில் கடைசி கட்ட பந்து வீச்சில் சற்று பின்னடவை சந்தித்தது குறித்து அச்சமடைய தேவையில்லை. நாம் இன்னும் நிறைய 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறோம். 20 ஓவர் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஒருநாள் போட்டியில் நமது கடைசி கட்ட பந்து வீச்சு முன்னேற்றம் அடைய முடியும். அது நமக்கு சாதகமாக அமையும்.

டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியிலும் பேட்டிங் நுணுக்கத்தை கடைப்பிடிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக எல்லா பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என்று சொல்லவில்லை. சவாலான சூழ்நிலையை புரிந்து அதற்கு தகுந்தபடி பொறுமையுடன் நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து மண்ணில் ரன் குவிப்பது எப்படி என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நமது அணியின் தொடக்க பேட்டிங் மற்றும் மிடில் ஆர்டர் நல்ல நிலையில் இருக்கிறது. இருப்பினும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். பேட்டிங்கில் முழு திறமையை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.