ஆஸ்திரேலிய ஓபன்: 14 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழைந்த வீனஸ் வில்லியம்ஸ்!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 13-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) காலிறுதியில் 24-வது இடத்தில் இருக்கும் அனஸ்டசியாவை (ரஷியா) சந்தித்தார்.

இதன் முதல் செட்டை வீனஸ் 6-4 என்ற கணக்கில் எளிதில் வென்றார். 2-வது செட்டில் அனஸ்டசியா பதிலடி கொடுத்து விளையாடினார். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு சென்றது. இதில் வீனஸ் 7-3 என்ற கணக்கில் அந்த செட்டையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 7-6 (7-3).

34 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் நுழைந்துள்ளார். ஒட்டு மொத்ததில் ஆஸ்திரேலிய ஓபனில் 3-வது முறையாக முன்னேறி இருக்கிறார். கிராண்ட்சிலாம் போட்டியை பொறுத்தவரை அவர் 21-வது தடவையாக அரையிறுதிக்கு நுழைந்தார்.

மற்றொரு கால்இறுதியில் உலகின் 7-ம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

புதுமுக வீராங்கனையான கோகோ வான்ட்வெக் (அமெரிக்கா) 6-4, 6-0 என்ற நேர்செட் கணக்கில் முகுருஜாவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதற்கு முன்பு 2015 பிரெஞ்சு ஓபனில் காலிறுதி வரை நுழைந்ததே அவரது சிறப்பான நிலையாக இருந்தது.

வான்வெக் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்சை சந்திக்கிறார்.

நாளை நடைபெறும் மற்ற கால்இறுதி ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) – லுசிக் பரோனி (குரோஷியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)-ஜோகன்னா (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

இதே போல ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் காலிறுதியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஜெர்மனியை சேர்ந்த மிஸ்ஜாவை சந்திக்கிறார். மற்றொரு காலிறுதியில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)-சோங்கா (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.

நாளை நடைபெறும் காலிறுதியில் ரபெல் நடால் (ஸ்பெயின்)-ரோனிக் (கனடா), கோபின் (பெல்ஜியம்)-டிமிரிட்ரோவ் (பல்கோரியா) மோதுகிறார்கள்.