‘பைரவா’ படத்தையடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் அவரது 61-வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இதில் முறுக்கு மீசை தாடியுடன் நடிக்க இருக்கிறார். இதற்காக விஜய் தாடி மீசை வளர்த்து வருகிறார். அவருக்காக படக்குழுவினர் காத்து இருக்கிறார்கள். மார்ச் மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கிய முதல்படமான ‘ராஜா ராணி’யில் நயன்தாரா, நஸ்ரியா முக்கிய வேடங்களில் நடித்தனர். அடுத்து விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோரை அட்லி நடிக்க வைத்தார்.
அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 61-வது படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 நடிகைகள் நடிக்க உள்ளனர். `நான் ஈ’, `பாகுபலி’, `பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜேந்திர பிரசாத் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுவது குறிப்பிடத்தக்கது.
விஜய் – அட்லி மீண்டும் இணைவதால் பெரிதாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் காமெடியனாக வடிவேலு நடிப்பதாக தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சத்யன் – விஜயுடன் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, `சச்சின்’, `அழகிய தமிழ்மகன்’, `வேட்டைக்காரன்’, `நண்பன்’, `துப்பாக்கி’ `புலி’ உள்ளிட்ட படங்களில் சத்யன், விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் அட்லி இயக்கிய `ராஜா ராணி’ படத்திலும் சத்யன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.