முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை காப்பாற்றுகிறாரா நிதியமைச்சர்?

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கோப்குழு வெளியிட்ட அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வரலாற்றில் மிகவும் குறைந்த விலைக்கு வெளியிடப்பட்ட பிணை முறி கொடுக்கல் வாங்கல் இதுவாகும். எதிர்க்கட்சிகள் இதனை மூடி மறைக்க முயற்சிக்கின்றன.

மத்திய வங்கி பிணை முறி மோசடியின் ஊடாக ஏதேனும் நட்டம் ஏற்பட்டிருந்தால் அந்த நட்டத்தை காண்பிக்குமாறு சவால் விடுகின்றேன்.

2009ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் நான்கு தடவைகள் கேட்ட போதிலும் இதுவரையில் அந்த அறிக்கை கிடைக்கவில்லை.

இந்த விபரங்கள் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்கவிடம் வழங்கப்பட்டுள்ளது.

சுயாதீன கணக்காய்வாளர் திணைக்களம் என்றால் ஏன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை? இது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மத்திய வங்கியில் கடமையாற்றி வரும் சில அதிகாரிகள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் தொடர்பில் பொறுமை காத்தது போதும்.

இவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். அதேபோன்று எமது அமைச்சரவையிலும் முதுகெலும்பு இல்லாத சிலர் இருக்கின்றார்கள்.

இவர்கள் நாம் இல்லாத நேரத்தில்தான் கூச்சல் இடுவார்கள் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.