தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து போராடி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்து நேற்று சில வன்முறை சம்பவங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி, சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில், ”தைரியம் இருந்தால் மெரினாவிற்கு வருமாறு பொறுக்கிகள் என்னை அச்சுறுத்தினார்கள்.
சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் ஐய்யோ, ஐய்யோ என அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். தற்போது பொறுக்கிகள் தமிழ்நாட்டிற்கு வருமாறு கூறுகிறார்கள். சிவபெருமான் முடிவு செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “முதல்வர் ஓ.பி 3 நல்ல விஷயங்களை செய்துள்ளார். 1.சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளின் படி நடந்த ஜல்லிக்கட்டை நிறுத்திவிட்டார். தமிழக சட்டசபையில் சட்டதிருத்த மசோதாவை கொண்டு வந்தார் 3.பொறுக்கிகள் மீது தாக்குதல் நடத்தும்படி உத்தரவிட்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் பொறுக்கிகள் என்று கூறி சுப்ரமணியன் சுவாமி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, போராட்டம் தொடங்கிய சில தினங்களில், பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில், “டுவிட்டரில் பீட்டா அமைப்பை அச்சுறுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்யும் அனைத்து தமிழ் பொறுக்கிகளும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக தங்கள் முகவரியையும் எழுத வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மத்தியில் சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்கு கடுமையாக கொந்தளிப்பு நிலவியது.
இந்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும் இடையேயும் கருத்து மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.