ஜென் கதை: சிறந்த ஆயுதம்

ஒரு காலத்தில் சிறந்த போர்வீரராக இருந்த ஒருவர், போரை கைவிட்டு விட்டு துறவியாக மாறினார். துறவின் மூலமாக தான் அடைந்த இறை சிந்தனையையும், அமைதியையும் விரும்பும் நபர்களுக்குக் கற்றுக்கொடுக்க நினைத்தார். எனவே தனக்கென்று ஒரு குடிலை அமைத்தார். தன்னை நாடி வருபவர் களுக்கு உபதேசங்களை வழங்கினார். தன்னிடம் சீடர்களாக சேர விரும்பியவர்களை சேர்த்துக் கொண்டார். தினமும் அவர்களுக்கு பயிற்சியும், தியானமும் கற்றுக்கொடுத்தார்.

காலங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு முறை தன்னுடைய சீடர்களுக்கு அமைதியின் வழியில்தான் அனைத்தையும் பெற முடியும் என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார் துறவி. அவரிடம் பாடம் கற்றுக்கொண்டிருந்த சில சீடர்களுக்கு, தன்னுடைய துறவி இளமை காலத்தில் மிகப்பெரிய போர் வீரராக இருந்தவர் என்ற உண்மை தெரியவந்தது. இது பற்றி அவர்கள் துறவியிடம் கேட்டனர். ‘குருவே! தாங்கள் துறவியாக மாறுவதற்கு முன்பு, பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றிகள் பலவற்றை குவித்ததாகவும் கேள்விப்பட்டோம். அது உண்மைதானா?’ என்றனர்.

இதனைக் கேட்ட துறவி, ‘ஆம்! உண்மைதான். போருக்கு பயன்படுத்தும் ஆயுதத்திலும், மூர்க்கத்தனமான வீரத்திலும் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த காலகட்டம் அது. அதன்பிறகு ஆயுதங்கள் தேவை இல்லை என்று உணர்ந்தேன். அதனால் இப்போது நான் ஆயுதங்களை கைவிட்டு விட்டேன்’ என்று பதிலளித்தார்.

‘அப்படியானால் குருவே! போர் என்பது தவறான ஒன்றா? ஆயுதங்கள் என்பது தேவையற்றதா?’ என்று வினா எழுப்பினர் சீடர்கள்.

துறவியோ புன்னகை பூத்தபடி, ‘சரி.. தவறு.. என்ற வாதத்திற்குள் வர எனக்கு விருப்பமில்லை. ஒரு கட்டத்திற்கு மேல், புத்திக்கூர்மையையும், அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆகையால்தான் போர்க் கருவிகளான ஆயுதங்களை நான் கைவிட்டு விட்டேன்’ என்று விளக்கமளித்தார்.

ஆனால் அந்த விளக்கம் சீடர்களுக்கு மன நிறைவைத் தரவில்லை. துறவியின் வார்த்தையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. துறவிக்கு ஆயுதங்கள் தேவையா? இல்லையா? என்பதை சோதித்துப் பார்த்து விட அவர்கள் எண்ணினர். அதற்காக அவர்கள் ஒரு திட்டத்தையும் தீட்டினர்.

மறுநாள் அனைத்து சீடர்களும் வழக்கமாக கூடும் இடத்தில் கூடியிருந்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தனர். பயிற்சி முடிந்ததும் சீடர்கள் அனைவரும் தங்கும் இடங்களுக்குத் திரும்பினர். இருவர் மட்டும் அங்கிருந்து எழுந்து சென்று, மறைவான ஒரு இடத்தில் போய் நின்று கொண்டனர்.

குரு தலையை கவிழ்ந்தபடி எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு சீடர்களும், தங்கள் முகத்தை மூடிக்கொண்டு சிறிய கம்புடன் குருவின் முன்பாகப் போய் நின்றனர். அவர்களைப் பார்த்த துறவி, எந்த விதத்திலும் பதற்றம் அடையவில்லை. அவர்கள் இரு வரையும் சிறிது நேரம் உற்று நோக்கினார்.

குருவிடம் எந்தச் சலனமும் இல்லாததைக் கண்ட சீடர்கள், அவரைத் தாக்க பாய்ந்தனர். அப்போது துறவி, சற்றே விலகி குனிந்து கொண்டார். வேகமாக வந்த சீடர்கள் இருவரும் நிலை தடுமாறி ஒருவரோடு ஒருவர் மோதி தரையில் விழுந்தனர். அவர்களின் உடல் நேருக்கு நேராக மோதியதில் அவர்கள் வலியால் துடித்தனர்.

துறவி இப்போதும் எதுவும் நடக்காததுபோல், தன்னுடைய பணியைத் தொடங்கினார்.

சீடர்கள் எழுந்து வந்து, முகத்தில் கட்டியிருந்த துணியை அகற்றி தங்களை மன்னித்துவிடும்படி வேண்டினர். மேலும் புத்திசாலித்தனத்துடன் செயல்படும் போது எதிரியை சமாளிக்க எந்தவித ஆயுதமும் தேவை இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டதாக துறவியிடம் தெரிவித்தனர்.