நல்லாட்சியிலும் ஊழல் மோசடி! துளியும் குறையவில்லை!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பிலான உண்மைகளை நாட்டு மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், காலம் காலமாக தற்போதுள்ள ஆட்சிவரை நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலினால் நாட்டின் ஜனநாயகம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கின்றது என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான கோப் அறிக்கை குறித்து நேற்று நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது இஞ்சம் என்பது பரவலான ஒன்றாக மாறிவிட்டது. ஆட்சிகள் மாறினாலும் இது மட்டும் தொடந்து கொண்டு இருப்பது தான் பாரிய ஆபத்தாக உள்ளது.

இவ்வாறான மோசடிகள் இடம்பெறும் போது அரச தரப்பினரை எதிரணியினர் கடுமையாக விமர்சிப்பது வழமையான ஒன்றாகும்.

ஆனால் பின்னர் எதிரணியினர் ஆட்சி பீடமேறியவுடனும் அந்த பிழை தான் தொடர்கின்றதே ஒழிய ஊழலோ மோசடியோ துளியளவேனும் குறைந்ததாகத் தெரியவில்லை.

நாட்டைப் பொறுத்தவரை இத்தனை காலமாக ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் இந்தப் பிழையைத் தான் செய்துள்ளன.

எனினும் டி.எஸ். சேனாநாயக்கவையோ டட்லி சேனாநாயக்கவையோ சிறிமாவோ பண்டாரநாயக்கவையோ ரணசிங்க பிரேமதாஸவையோ ஊழல் வாதிகள் என்று எவரும் கூறியதில்லை.

அதேபோல் தான் தற்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையோ நாம் ஊழல்வாதிகள் என்று கூறவில்லை.

மாறாக இவர்கள் அரசில் இடம்பெறும் இதுபோன்ற பிழைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றுத் தான் கேட்டுக்கொள்கிறோம்.

எம்மைப்பொறுத்தவரை ஜனநாயகத்தை படிப்படியாக அழித்து கொண்டிருக்கும் இந்த ஊழல் எமது நாட்டிலிருந்து முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

அத்தோடு இந்த நாடு உழைக்கும் மக்களுக்கு உரித்தான ஒரு நாடாகும். இவர்களின் பணத்தை கொள் ளையடிப்பது எவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

எனவே மத்திய வங்கி விவாகரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.