மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி. பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (25.01.2017) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் இனவாதத்தை தூண்டும் விதமாக பேசியதாகக் கூறி, அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராகவும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி.பூபாலராஜாவுக்கு எதிராகவும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை அடுத்து, இவர்கள் இருவருக்கும் கடந்த டிசெம்பர் 14ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.
இது தொடர்பான வழக்கு நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.