இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்பவர் புஜாரா. டெஸ்ட் அணியில் 3-வது நபராக களம் இறங்கும் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது.
இதனால் ஐ.பி.எல். தொடரில் கூட அவர் ஏலம் எடுப்பதற்கு தயங்குகிறார்கள். கடந்த இரண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் என்ற முத்திரையை ஏற்படுத்துவேன் என்று புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் என்ற முத்திரையை உருவாக்க விரும்புகிறேன். டி20 போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடியுள்ளேன். மும்பையில் நடைபெற்ற டி.ஒய். பட்டீல் டி20 தொடரில் சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் விளாசியுள்ளேன். மற்ற போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை அதிக அளவில் உள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு தயாராகியுள்ளேன். டி20 கிரிக்கெட்டில் களம் இறங்கும்போது ஏராளமான ஷாட்டுகள் அடிப்பேன். டி.ஒய். பட்டீல் டி20 டிராபியில் சிறப்பாக வினையாடினேன். சையத் முஸ்தாக் அலி டிராபியில் விளையாட உள்ளேன். இதில் சிறப்பாக விளையாடினால், ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்.
டெஸ்ட் போட்டிகளைத் தவிர மற்ற வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்க்க, என்னுடைய வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். நான் மற்றவகை கிரிக்கெட்டில் வளர்ச்சி அடைந்து வருகிறேன். அதிகமான ஷாட்டுக்களை அடிக்கிறேன். டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவேன் என்ற முத்திரை நேரம் வரும்போது மாறும்’’ என்றார்.