கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இன்று நடந்த கால்இறுதியில் 9-ம் நிலை வீராங்கனை ஜோகன்னா கோன்டாவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 8-வது தடவையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மற்றொரு கால்இறுதியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிலிஸ்கோவா (செக்குடிரசு) அதிர்ச்சிகரமாக தோற்றார். தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவை சேர்ந்த லுசிக் பரோனி 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு அவர் 4-வது சுற்று வரை நுழைந்து இருந்ததே சிறப்பானதாகும்.
பெண்கள் அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. ஒரு அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)- வான்ட்வெக் (அமெரிக்கா) மோதுகிறார்கள். 2-வது அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- லுசிக் பரோனி (குரோஷியா) மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்)- மூன்றாம் நிலை வீரரான ரோனிக் (கனடா) மோதுகிறார்கள். இந்த ஆட்டம் நடாலுக்கு கடும் சவாலாக இருக்கும்.
மற்றொரு கால்இறுதியில் 11-ம் நிலை வீரர் டேவிட் கோபின் (பெல்ஜியம்)- டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.
4-ம் நிலை வீரரான, வாவ்ரிங்கா, 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.