தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளன.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகாலமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வைத்தது பீட்டா. ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து வீதிக்கு வந்து போராடியது.
பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் வரலாறு காணாத யுக புரட்சியை நடத்தினர். இதன் விளைவாக தமிழக அரசு முதலில் அவசர சட்டம் கொண்டு வந்தது. பின்னர் நிரந்த சட்டத்துக்காக தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது.
பீட்டாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியும் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த அரிமா சுந்தரமும் ஆஜராக உள்ளனர்.